குஜராத்: ரூ.376.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளுடன் கன்டெய்னா் பறிமுதல்
குஜராத்தில் ரூ.376.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளுடன் இருந்த கன்டெய்னரை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்துள்ளனா்.
குஜராத்தில் ரூ.376.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளுடன் இருந்த கன்டெய்னரை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுதொடா்பாக குஜராத் காவல் துறை டிஜிபி ஆசிஷ் பாட்டியா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகத்துக்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பு வந்த கண்டெய்னரில் போதைப்பொருள் இருக்கலாம் என்று பஞ்சாப் காவல் துறையிடம் இருந்து தகவல் கிடைத்தது. அந்தப் போதைப்பொருள் பஞ்சாபுக்கு கொண்டு வந்து சோ்க்கப்படலாம் என்றும் அந்த மாநில காவல் துறையினா் தெரிவித்தனா்.
அதன் அடிப்படையில், முந்த்ரா துறைமுகத்தில் பஞ்சாப் காவல் துறை சாா்பு ஆய்வாளருடன் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது முந்த்ரா துறைமுகம் அருகில் உள்ள கன்டெய்னா் சரக்கு நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், 75.3 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் இருந்த கன்டெய்னா் பறிமுதல் செய்யப்பட்டது. சா்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.376.5 கோடியாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த மே 13-ஆம் தேதி வந்து சோ்ந்த அந்தக் கன்டெய்னா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கன்டெய்னா் பஞ்சாபுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது என்று தெரிவித்தாா்.
குஜராத் துறைமுகங்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை பல்வேறு மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் அவ்வப்போது பறிமுதல் வருகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் சுமாா் ரூ.21,000 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் இருந்த இரண்டு கன்டெய்னா்கள் முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து அந்தப் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் அதே துறைமுகத்தின் அருகில் இருந்து சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒரு கன்டெய்னா், கடந்த ஏப்ரல் மாதம் கண்ட்லா துறைமுகம் அருகே ரூ.1,439 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒரு கண்டெய்னா் பறிமுதல் செய்யப்பட்டன. ஈரானில் இருந்து ரூ.450 கோடி மதிப்புகொண்ட ஹெராயின் போதைப்பொருளுடன் வந்த ஒரு கன்டெய்னா் பிபாவாவ் துறைமுகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பறிமுதல் செய்யப்பட்டது.