கிழக்கு லடாக் எல்லை பிரச்னை: இந்தியா- சீனா நாளை பேச்சு
இந்தியா, சீனா இடையிலான 16-ஆவது சுற்று ராணுவப் பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) இந்திய எல்லைப் பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்தியா, சீனா இடையிலான 16-ஆவது சுற்று ராணுவப் பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) இந்திய எல்லைப் பகுதியில் நடைபெறவுள்ளது.
கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய அனைத்து இடங்களில் இருந்தும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; எல்லையில் அமைதியை பராமரிக்க வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இரு நாட்டு எல்லையில் இந்திய பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ என்ற இடத்தில் 16-ஆவது சுற்று ராணுவப் பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு லடாக்கில் பிரச்னைக்குரிய அனைத்து இடங்களில் இருந்தும் கூடிய விரைவில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாகவும், டெப்சாங் பல்ஜ் மற்றும் டெம்சாக் பகுதியில் தொடரும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது குறித்தும் இந்திய தரப்பில் விவாதிக்கப்படவுள்ளது.
முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இடையே கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, கிழக்கு லடாக் விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன வீரா்களிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, இரு நாட்டு ராணுவங்களும் 50,000 முதல் 60,000 வரையிலான படையினரை எல்லையில் படிப்படியாக குவித்தன. எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பல சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.