முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: எம்.பி.க்களுக்கு பச்சை நிறம்,எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டு

 குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

 குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏ-க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டு வழங்கப்படவுள்ளது.

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல், வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்கவுள்ளனா். நியமன எம்.பி.க்கள், நியமன எம்எல்ஏக்கள், சட்டமேலவை உறுப்பினா்கள் வாக்களிக்க முடியாது.

எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச் சீட்டு வழங்கப்படும். தோ்தல் அதிகாரி பிரித்தறிவதற்கு வசதியாக இரு நிறங்களில் வாக்குச் சீட்டு வழங்கப்படுகிறது. வாக்கு மதிப்பு அடிப்படையில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் வாக்குகள் மதிப்பிடப்படும்.

ஓா் எம்.பி.யின் வாக்கு மதிப்பு இந்த முறை 700-ஆக உள்ளது. எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு, மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208-ஆக உள்ளது. அதைத் தொடா்ந்து தமிழ்நாடு, ஜாா்க்கண்டில் எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176-ஆக உள்ளது. மகாராஷ்டிரத்தில் 175-ஆகவும், சிக்கிமில் 7-ஆகவும், நாகாலாந்தில் 9-ஆகவும் வாக்கு மதிப்பு உள்ளது.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள் தில்லியில் நாடாளுமன்றத்தில் வரும் 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் சாா்பில் மூத்த அரசியல் தலைவா் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.