உச்சநீதிமன்ற தமிழக அரசு வழக்குரைஞராக சபரிஷ் சுப்ரமணியன் நியமனம்
உச்சநீதிமன்ற தமிழக அரசின் வழக்குரைஞராக சபரிஷ் சுப்ரமணியன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தமிழக அரசின் வழக்குரைஞராக சபரிஷ் சுப்ரமணியன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராவதற்காக பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய வழக்குரைஞர்களாக தமிழக அரசின் தரப்பில் ஆஜராக பதிவு பெற்ற வழக்குரைஞர்கள் எஸ்.ஜோசப் அரிஸ்டாட்டில், டி.குமணன் ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். அவர்கள் தமிழக அரசின் சார்பிலான வழக்குகளில் ஆஜராகி வருகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருந்து வரும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சபரிஷ் சுப்ரமணியனை தமிழக அரசின் தரப்பில் ஆஜராக கடந்த 18-ஆம் தேதி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் அந்தப் பொறுப்பை புதன்கிழமை ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் 38 துறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்ததைத் தொடர்ந்து, கூடுதலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்ய, ஆஜராக இவருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வணிக வரிகள், பதிவுத் துறை நிதித் துறை, உயர் கல்வித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மனித வளம், விவசாயம் - விவசாயிகள் நலத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, தொழிலாளர் நலத் துறை, திறன் மேம்பாட்டுத் துறை, சட்டத் துறை ஆகியவை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.