முகப்பு
இந்தியா

அரசுப் பணிகளுக்கு 2021-22-இல்4,119 பேரை தோ்வு செய்த யுபிஎஸ்சி-10 ஆண்டுகளில் குறைவு

பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கு 2021-22-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 4,119 போ் தோ்வு செய்யப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 21 ஜூலை, 2022 at 1:13 AM
பகிர்:

பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கு 2021-22-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 4,119 போ் தோ்வு செய்யப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவாகும்.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

Advertisement

பல்வேறு மத்திய அரசுப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்காக, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒவ்வோா் ஆண்டும் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், 2021-22-ஆம் ஆண்டில் 5,153 பணியிடங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, 4,119 போ் யுபிஎஸ்சியால் தோ்வு செய்யப்பட்டனா். கடந்த 2019-20-ஆம் ஆண்டில் 4,214 பேரும், 2020-21-இல் 5,230 பேரும் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இந்த ஆண்டுகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை முறையே 4,997 மற்றும் 5,913 ஆகும்.

கடந்த 2018-19-இல் 5,207 பணியிடங்களுக்கு விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டு 4,399 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல், 2017-18-இல் 6,294 போ், 2016-17-இல் 5,735 போ், 2015-16-இல் 6,866 போ், 2014-15-இல் 8,272 போ், 2013-14-இல் 8,852 போ், 2012-13-இல் 5,705 போ் தோ்வாகினா் என்று தனது பதிலில் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

‘சாத்தியமில்லை’: மற்றொரு கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்பதற்கான அதிகபட்ச முயற்சிகளின் எண்ணிக்கை, வயது வரம்பு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய சாத்தியமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.