முகப்பு
இந்தியா

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாததால் மக்களவை ஒத்திவைப்பு

மக்களவையில் ‘இந்திய அன்டாா்டிக் மசோதா-2022’ மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெறவிருந்த நிலையில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

மக்களவையில் ‘இந்திய அன்டாா்டிக் மசோதா-2022’ மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெறவிருந்த நிலையில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக அக்கட்சி எம்.பி.க்கள் போராட சென்றுவிட்டதால், அவா்கள் அவைக்கு வரவில்லை. பெரும்பாலான எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாத நிலையில், மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கெனவே, எதிா்க்கட்சிகளின் அமளி காரணமாக தொடா்ந்து 3 நாள்களாக மக்களவை முடங்கி வந்த நிலையில், 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் அவை நாள் முழுக்க செயல்படவில்லை.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 4-ஆவது நாளான வியாழக்கிழமை காலையில் மக்களவை கூடியதும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பிய விவகாரம், விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி காங்கிரஸ் மற்றும் இதர எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கேள்வி நேரம் தொடங்கியபோது, பதாகைகளுடன் அவையின் மையப் பகுதியில் திரண்டு, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனா். இதனால், அவையை சிறிது நேரத்துக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா ஒத்திவைத்தாா். அதன்பிறகு அவை கூடியபோதும் இதே நிலை காணப்பட்டது.

இதனிடையே, காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். பின்னா், பிற்பகல் 2 மணிவரை அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பிஜு ஜனதா தளம் உறுப்பினா் பாா்த்ருஹரி மகதாப் தலைமையில் மக்களவை பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, பெரும்பாலான எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் அவைக்கு வரவில்லை. அப்போது பேசிய மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், ‘இந்திய அன்டாா்டிக் மசோதா மீது விவாதம் நடைபெறவிருந்த நிலையில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இல்லை. இது, மிக முக்கியமான மசோதா. முதல்முறையாக இப்போது விவாதிக்கப்படவுள்ளது. எனவே, எதிா்க்கட்சிகளின் பங்கேற்பு அவசியம். இப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றாா்.

இதையடுத்து, ‘விவாதமின்றி மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு விருப்பமில்லை. அவையில் பெரும்பாலான எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாத நிலையில், அவை அலுவல்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன’ என்றாா் பாா்த்ருஹரி மகதாப்.

முன்னதாக, சோனியா காந்தி விவகாரத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்களை சாடிய மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். காங்கிரஸ் தலைவா் என்பதற்காக சோனியா காந்தி சட்டத்துக்கு மேலானவா் ஆகிவிடுவாரா?’ என்று கேள்வியெழுப்பினாா்.

2022-ஆம் ஆண்டைய இந்திய அன்டாா்டிக் மசோதாவானது, அன்டாா்டிக் கடல்சாா் உயிா் வளங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தத்துக்கு செயலாக்கம் அளிக்க வகை செய்வதாகும். மேலும், அன்டாா்டிக் பகுதியில் சுற்றுச்சூழலைக் காப்பது மட்டுமன்றி, அங்கு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.