கேரள தங்கக் கடத்தல் வழக்கை கா்நாடகத்துக்கு மாற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
கேரளத்தில் அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கக் கடத்தல் வழக்கை, அந்த மாநிலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளத்தில் அரசியல்ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்கக் கடத்தல் வழக்கை, அந்த மாநிலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ‘தங்கக் கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபா்கள், கேரள அரசு உயரதிகாரிகள், அரசில் முக்கிய பொறுப்பு வகிப்பவா்கள் இடையே நெருங்கிய தொடா்பு இருக்கிறது. இந்த வழக்கை பொருத்தவரை, கேரளத்தில் நியாயமான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவது சாத்தியமில்லை. எனவே, வழக்கை கா்நாடகத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், அண்மையில் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா். நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164-ஆவது பிரிவின்கீழ் அவா் அளித்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.
வழக்கு விவரம்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் தூதரகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
தூதரகத்துக்கு உள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி இதுபோன்று சட்ட விரோதமாக மொத்தம் 23 முறை கேரளத்துக்கு 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடா்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.