இந்தியாவில் 854 பேருக்கு 1 மருத்துவா்: உலக சுகாதார நிறுவன பரிந்துரையை விட அதிகம்
இந்தியாவில் 854 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதாசாரம் உள்ளது.
இந்தியாவில் 854 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதாசாரம் உள்ளது. இது, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையான 1,000 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற தரநிலையைவிட மேம்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி, இந்த ஆணையத்திலும் மாநில மருத்துவ கவுன்சில்களிலும் 13,08,009 அலோபதி மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா். இது, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரமாகும். இதுதவிர 5.65 லட்சம் ஆயுஷ் மருத்துவா்கள், 34.33 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியா்கள், 13 லட்சம் துணை மருத்துவ மற்றும் சுகாதார பணியாளா்கள் உள்ளனா். அரசு மருத்துவமனைகளில் தேவையான சுகாதார பணியாளா்களை நியமிப்பதும் போதிய படுக்கை வசதியை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பாகும்.
நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-இல் 51,348-ஆக இருந்த இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை இப்போது 91,927-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 79 சதவீத உயா்வாகும். இதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-இல் 31,185-ஆக இருந்தது. இன்றைய தேதியில் இது 60,202-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவா்கள்-மக்கள் விகிதாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் பங்களிப்புடன் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 72 கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளாா்.