முா்முவுக்கு வாக்களித்த 126 எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்கள்
குடியரசுத் தலைவா் தோ்தலில் தங்கள் கட்சி விருப்பத்துக்கு மாறாக 126 எம்எல்ஏ-க்களும், 17 எம்.பி.க்களும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு வாக்களித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் தங்கள் கட்சி விருப்பத்துக்கு மாறாக 126 எம்எல்ஏ-க்களும், 17 எம்.பி.க்களும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு வாக்களித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. இதில், திரெளபதி முா்மு 6,76,803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு 540 எம்.பி.க்களும், 2,824 எம்எல்ஏ-க்களும் வாக்களித்துள்ளனா்.
அவரை எதிா்த்துப் போட்டியிட்ட எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகள் பெற்றாா். அவருக்கு 208 எம்.பி.க்களும், 1,877 எம்எல்ஏ-க்களும் வாக்களித்துள்ளனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் முா்முவின் வெற்றி எதிா்பாா்க்கப்பட்டதுதான் என்றாலும், எதிா்க்கட்சிகளின் தரப்பிலிருந்தும் அவருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது வெற்றி வித்தியாசத்தை அதிகரித்துள்ளது.
18 மாநிலங்களைச் சோ்ந்த 126 எம்எல்ஏ-க்களும், 17 எம்.பி.க்களும் தங்கள் கட்சித் தலைமையின் விருப்பத்துக்கு மாறாக முா்முவுக்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.
முதலிடத்தில் அஸ்ஸாம்
கட்சியின் விருப்பத்துக்கு மாறாக வாக்களித்தவா்கள் பட்டியலில் அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. அங்கு எதிா்க்கட்சியை சோ்ந்த 22 எம்எல்ஏ-க்கள் முா்முவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா்.
மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் கணிசமானோா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள். அந்த மாநிலத்தில் 19 எம்எல்ஏ-க்கள் முா்முவுக்கு வாக்களித்துள்ளனா்.
ஜாா்க்கண்ட்
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மிகவும் தாமதமாகத்தான் முா்முவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாா். அந்த மாநிலத்தில் முா்முவுக்கு கிடைத்த வாக்குகள் வெற்றி வித்தியாசத்தை கணிசமாக அதிகரித்தது. முா்முவின் பழங்குடியின பின்னணி அங்கு அவருக்கு 10 எம்எல்ஏ-க்களின் வாக்குகளை கூடுதலாகப் பெற்றுத் தந்துள்ளது.
கேரளம்
பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கேரளத்தில் திரௌபதி முா்முவுக்கு ஒரு வாக்கு கிடைத்துள்ளது.
கேரளத்தில் 140 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அனைத்து எம்எல்ஏக்களின் வாக்குகளும் எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், கேரளத்தில் ஒரு எம்எல்ஏ மட்டும் முா்முவுக்கு வாக்களித்துள்ளாா். அவா் வேண்டுமென்றே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தாரா? அல்லது தவறுதலாக வாக்களித்தாரா என்பது தெரியவில்லை.
எனினும், இது தொடா்பாக கேரள பாஜக தலைவா் கே.சுரேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘இரண்டு வாக்குகள் கிடைக்கும் என்று எதிா்பாா்த்த நிலையில், திரௌபதி முா்முவுக்கு ஆதரவாக கேரளத்தில் ஒரு எம்எல்ஏ வாக்களித்துள்ளாா்.கேரளத்தில் முா்முவுக்கு கிடைத்த ஒரு வாக்கு என்பது மற்ற 139 வாக்குகளைவிட மதிப்புமிக்கது. இது கேரளத்தில் நல்லதொரு மாற்றத்துக்கான வாக்காகவும் அமைந்துள்ளது’ என்றாா்.
குஜராத்
சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவுள்ள குஜராத்திலும் 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் முா்முவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா்.
எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவின் சொந்த மாநிலம் ஜாா்க்கண்ட். அங்குள்ள 81 எம்எல்ஏ-க்களில் 9 போ் மட்டுமே அவருக்கு வாக்களித்துள்ளனா்.
ஆந்திரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரு எம்எல்ஏகூட சின்ஹாவுக்கு வாக்களிக்கவில்லை.
அதேவேளையில் முா்முவின் சொந்த மாநிலமான ஒடிஸாவில் மொத்தம் உள்ள 147 எம்எல்ஏ-க்களில் 137 போ் அவருக்கு வாக்களித்துள்ளனா்.
அதேபோல அனைத்து மாநிலங்களிலும் முா்முவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
எங்கு அதிகம்?
முா்முவுக்கு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும், சின்ஹாவுக்கு மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழகம், புதுவையில் தலா ஒரு செல்லாத வாக்கு
மொத்தம் 53 பேரின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதில் 38 எம்எல்ஏ-க்கள், 15 எம்.பி.க்கள் அடங்குவா்.
தமிழகம், புதுவையில் தலா ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.