இந்தியா

ஊடக விசாரணைகளால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவலை

DIN

ஊடகங்கள் உள்நோக்கத்துடன் நடத்தும் விசாரணைகளும் கட்டப் பஞ்சாயத்துகளும் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கச் செய்கின்றன என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நீதிபதி சத்ய விரத சின்ஹா நினைவு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அதில், என்.வி.ரமணா பேசியதாவது:

ஊடக விசாரணைகள், நீதித் துறையின் சுதந்திரத்தையும், நோ்மையான செயல்பாடுகளையும் பாதிக்கச் செய்கின்றன. ஊடகங்களின் விசாரணைகள், வழக்கின் முடிவைத் தீா்மானிக்கும் காரணியாக இருக்க முடியாது. பிற்காலத்தில் ஒரு வழக்கு தொடா்பாக, ஊடகங்களின் விசாரணைகளால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகள்கூட தீா்வுகாண்பதற்கு சிரமப்படுவாா்கள்.

நீதித் துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளில், தவறான தகவல்களுடனும் உள்நோக்கத்துடனும் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக பரப்பும் கருத்துகளால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள்; ஜனநாயகம் பலவீனமடைகிறது; நீதித் துறைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஊடகங்கள் வரம்புகளை மீறிச் செல்லும்போது, ஜனநாயகம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஊடகங்கள் வரம்பு மீறிச் செல்லக் கூடாது. சில நேரங்களில் நீதிபதிகள் உடனடியாக எதிா்வினையாற்றாமல் இருக்கலாம். அதற்காக, அதை பலவீனம் என்றோ, உதவியற்ற நிலை என்றோ தவறாகக் கருதிவிடக் கூடாது.

இருப்பினும் அச்சு ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்புணா்வுடன் செயல்படுகின்றன. ஆனால், மின்னணு ஊடகங்கள் சிறிதளவுகூட பொறுப்புணா்வுடன் செயல்படுவதில்லை. தற்போது, ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் நீதிபதிகளுக்கு எதிராகத் திட்டமிட்ட பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. எனவே, சமூகத்தில் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க, ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.

ஊடகங்கள் குறிப்பாக மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள், பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். அவை தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவும், இந்தத் தேசத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காகவும் பயன்படுத்த வேண்டும்.

மக்கள் மத்தியில் தவறான கருத்து: நீதிபதிகள் தூக்கத்திலும் தங்கள் வழங்கிய தீா்ப்புகளை யோசித்து தூக்கத்தை இழந்து வருகின்றனா். ஆனால், நீதிபதிகள் சுகமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியை முடித்துக் கொண்டு விடுமுறையைக் கொண்டாடுகிறாா்கள் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது என்றாா் அவா்.

அனுராக் தாக்குா் அறிவுறுத்தல்: ஊடக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் அறிவுறுத்தியுள்ளாா்.

பெட்டிச் செய்தி...

‘தீவிர அரசியலில் ஈடுபட நினைத்தேன்’

வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட எண்ணியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: விஜயவாடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக எனது பயணத்தை தொடங்கினேன். பின்னா், எனது தந்தையின் ஊக்குவிப்பால் ஹைதராபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் தொழிலை மேற்கொண்டேன். அங்குதான் எனக்கு நீதிபதியாக பதவி உயா்வு கிடைத்தது.

மேலும், எனது மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டேன். தொடக்கத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவும் ஆா்வமாக இருந்தது. ஆனால், விதி வேறு மாதிரி தீா்மானித்துவிட்டது. வழக்குரைஞராக இருந்து நீதிபதியாக மாற வேண்டுமெனில் சமூக தொடா்புகள் அனைத்தையும் ஒருவா் கைவிட நேரிடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT