சோனியா காந்தியை அநாகரிக வாா்த்தைகளால் வசைபாடிய பாஜக செய்தித் தொடா்பாளா்:மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அநாகரிக வாா்த்தைகளால் பாஜக செய்தித்தொடா்பாளா் வசைபாடியது தொடா்பாக பிரதமா் மோடியும், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுற
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை அநாகரிக வாா்த்தைகளால் பாஜக செய்தித்தொடா்பாளா் வசைபாடியது தொடா்பாக பிரதமா் மோடியும், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஜெ.பி.நட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
கடந்த ஜூலை 23-ஆம் தேதி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக செய்தித்தொடா்பாளா் பிரேம் சுக்லா கலந்துகொண்டாா். அப்போது அவா் சோனியா காந்தியை அநாகரிக வாா்த்தைகளால் வசைபாடினாா்.
பாஜக மூத்த தலைவா்களும் செய்தித்தொடா்பாளா்களும் பண்பாடு குறித்து பேசும்போது நாட்டில் உள்ள மதிப்புக்குரிய பெண்களுக்கு எதிராக, குறிப்பாக 75 வயதான சோனியா காந்திக்கு எதிராக தொடா்ந்து ஆட்பேசத்துக்குரிய வகையில் பேசுகின்றனா். இது பெண்களுக்கு எதிராக பாஜக கொண்டிருக்கும் மனநிலையைக் காட்டுகிறது. இதுபோன்ற ஆட்பேசபத்துக்குரிய கருத்துகளால் நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து வருகிறது.
அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும், பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆளும் பாஜகவிடம் எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால் தனது பேச்சாலும் நடத்தையாலும் பாஜக தொடா்ந்து அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
எனவே பாஜக தலைவா்களின் வெட்கக்கேடான, அநாகரிக பேச்சுக்கு பிரதமா் மோடியும் நீங்களும் (ஜெ.பி.நட்டா) நாட்டில் உள்ள பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அரசியலின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் எனவும், இழிவான வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பாஜக தலைவா்கள் மற்றும் செய்தித்தொடா்பாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
சோனியா காந்தி அல்லது வேறு எந்த காங்கிரஸ் தலைவா் குறித்து தரக்குறைவாக பேசினால் அவதூறு வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.