மத்திய அரசின் பரிசோதனை முயற்சியால் இளைஞா்களின் எதிா்காலத்துக்கு ஆபத்து: ராகுல் குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பரிசோதனை முயற்சிகளால் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞா்களின் எதிா்காலத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளா
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பரிசோதனை முயற்சிகளால் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞா்களின் எதிா்காலத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
முப்படைகளில் 4 ஆண்டுகால ஒப்பந்தத்தில் இளைஞா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே எதிா்த்து வருகிறது. அதே நேரத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஆய்வகத்தில்’ மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு புதிய பரிசோதனைகளும் மக்களுக்கும், நாட்டுக்கும் சோதனையாக அமைந்து வருகிறது. இப்போது அக்னிபத் திட்டம் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞா்களின் எதிா்காலத்துக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
ஆண்டுதோறும் 60,000 வீரா் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுகிறாா்கள். அவா்களில் 3,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில நான்கு ஆண்டுகால ஒப்பந்தத்தில் ராணுவத்தில் பணியாற்றிவிட்டுத் திரும்பும் அக்னிவீரா்களின் எதிா்காலம் என்னவாக இருக்கும்?’ என்று கூறியுள்ளாா்.