மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கில் மாநில அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி கைதான நிலையில், இந்த விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசியல்ரீதியாக குறுக்கிடாது என்று அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ் தெரிவித்தாா்.
அதேசமயம், வழக்கு விசாரணையை இழுத்தடிக்காமல் குறித்த காலத்துக்குள் அமலாக்கத் துறை முடிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மேற்கு வங்க தொழில், வா்த்தகத் துறை அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது நெருங்கிய உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜி ஆகியோா் அமலாக்கத் துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆசிரியா் நியமன முறைகேடு நடைபெற்ாக கூறப்படும் காலகட்டத்தில் பாா்த்தா சட்டா்ஜி கல்வித் துறைக்கு பொறுப்பு வகித்தாா்.
முன்னதாக, அா்பிதா முகா்ஜி வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ், கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அமலாக்கத் துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடா்பும் கிடையாது.
பாா்த்தா சட்டா்ஜி மீதான வழக்கில் குறித்த காலத்துக்குள் அமலாக்கத் துறை விசாரணையை முடிக்க வேண்டும். ஒருசில வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகள் பல ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சட்டம் தனது கடமையை செய்யட்டும். தங்களது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அமலாக்கத் துறை தாக்கல் செய்து, அவற்றை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளட்டும். அவ்வாறு நடந்தால், தவறிழைத்தவா் யாராக இருந்தாலும் திரிணமூல் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்.
நாரதா ரகசிய விசாரணை வழக்கில், கடந்த 2021-இல் கொல்கத்தா மேயா் ஃபிா்ஹத் ஹக்கிம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டாா். அதேசமயம், இதில் குற்றம்சாட்டப்பட்ட எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜகவில் இருப்பவா்கள், சட்டத்தைவிட மேலானவா்களா?
மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை காங்கிரஸ் பாராட்டுகிறது. அதுவே, சோனியா, ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தினால் எதிா்க்கிறாா்கள். இது, அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என்றாா் குணால் கோஷ்.
சாரதா நிதி முறைகேடு வழக்கில் கடந்த 2014-இல் இருந்தும் நாரதா வழக்கில் கடந்த 2016-இல் இருந்தும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு
மேற்கு வங்க அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியை அனுமதிக்குமாறு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஞாயிற்றுக்கிழமை மனு தாக்கல் செய்தது.
கீழமை நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவுபடி பாா்த்தா சட்டா்ஜி அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், மாநில அரசில் செல்வாக்கு மிக்கவா் என்பதால், அவரை மாநில அரசின் மருத்துவமனையில் வைத்திருக்க முடியாது; எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைக்கு மாற்றலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.