அமலாக்கத் துறை விசாரணை: சோனியா இன்று மீண்டும் ஆஜா்
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) மீண்டும் ஆஜராகவுள்ளாா்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) மீண்டும் ஆஜராகவுள்ளாா்.
அவரிடம் கடந்த 21-ஆம் தேதி இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக விசாரிக்கப்பட உள்ளாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: அமலாக்கத் துறை முன் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை மதியம் ஆஜராவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். முதலில் திங்கள்கிழமை ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. பின்னா், ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது.
விசாரணையின்போது, கடந்த முறையை போல் இப்போதும் கரோனா தடுப்பு நடைமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமலாக்கத் துறை முன் சோனியா ஆஜராவதையொட்டி, அவரது இல்லம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகப் பகுதிகளில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), அதிவிரைவு படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த முறை சோனியாவிடம் நடத்திய விசாரணையின்போது, 28 கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அவரிடமிருந்து பதில்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.