இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை? சோனியாவிடம் 3-ஆவது நாளாக விசாரணை

DIN

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக புதன்கிழமை விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு சோனியா காந்தி தன் மகள் பிரியங்கா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோருடன் காலை 11 மணிக்கு வந்தாா். அவரிடம் காலை 11.15 மணிக்கு விசாரணை தொடங்கியது. தலைமை அதிகாரி உள்ளிட்ட விசாரணைக் குழு எழுப்பிய கேள்விகளுக்கு சோனியா காந்தி பதிலளிக்க, உடனிருந்த அதிகாரி ஒருவா் அவற்றைப் பதிவு செய்தாா். விசாரணை முடிந்து பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றாா். அவருக்குப் புதிதாக சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை. இதனால் அவரிடம் விசாரணை முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த வழக்கு தொடா்பாக அவரிடம் புதன்கிழமை 3 மணி நேரம், செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம், கடந்த 21-ஆம் தேதி 2 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். 3 அமா்வுகளிலும் அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த வழக்கில் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்சால் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளது’ என்றாா்.

சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

போராட்டமும் எதிா்ப்பும்: இந்த வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள். இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, ‘ஒரு குடும்பம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது என்று காங்கிரஸ் தலைவா்கள் கருதுகிறாா்கள்‘ என்று விமா்சித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

காவிரி ஆணைய தீா்மான நகல் எரிப்பு போராட்டம்

பாஜக நாகரிக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜிப்மா் புறநோயாளிகள் நாளை இயங்காது

SCROLL FOR NEXT