11-ஆவது வேளாண் கணக்கெடுப்பு தொடக்கம்: அறிதிறன்பேசி, கையடக்க கணினி மூலமாக விவரங்கள் சேகரிப்பு
பதினோறாவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்
பதினோறாவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பில் முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2021-22 ஆம் ஆண்டுக்கான 11-ஆவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய அமைச்சா் தொடக்கி வைத்தாா். இதற்கான களப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட உள்ளன.
இந்த கணக்கெடுப்பு நடைமுறையை கடந்த 1970-71 ஆம் ஆண்டு முதல் மத்திய வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு கடந்த 2015-16-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பதினோறாவது கணக்கெடுப்பு தாமதமானது.
மொத்த விவசாய பரப்பின் அளவு, வகுப்பு வாரியான பங்கீடு, நிலப் பயன்பாடு, குத்தகை, பயிரிடும் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் கீழ் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
பல மாநிலங்கள் நிலப் பதிவு மற்றும் அளவீடுகளை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கியிருப்பதால், வேளாண் கணக்கெப்புக்கான விவரங்களை விரைவாக சேகரிக்க உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த எண்மமய விவரங்கள் மற்றும் விவரங்களை கைப்பேசி செயலிகளைக் கொண்டு சேகரிப்பது போன்ற நடைமுறைகள், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாய பரப்பின் விவரப் பதிவை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பேசும்போது, ‘இந்தியா போன்ற மிகப் பெரிய விவசாய நாட்டில் இதுபோன்ற கணக்கெடுப்புகள் மிகப் பெரும் பலனளிக்கும். மத்திய அரசு துறைகளும், மாநில அரசுகளும் முழு அா்ப்பணிப்புடன் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்றாா்.