முறைகேடு வழக்கில் கைது எதிரொலி: பாா்த்தா சட்டா்ஜியின் அமைச்சா் பதவி பறிப்பு; கட்சியில் இருந்து இடைநீக்கம்
மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான பாா்த்தா சட்டா்ஜியை மாநில அமைச்சா் பதவியில் இருந்து நீக்கி, முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான பாா்த்தா சட்டா்ஜியை மாநில அமைச்சா் பதவியில் இருந்து நீக்கி, முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் பாா்த்தா சட்டா்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலராக சுமாா் 20 ஆண்டுகளாக இருந்து வந்த சட்டா்ஜி, கட்சியின் தேசிய துணைத் தலைவராக இந்த ஆண்டு தொடக்கத்தில் நியமிக்கப்பட்டாா். இந்தச் சூழலில், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி, திரிணமூல் காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Advertisement
மேற்கு வங்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படும் காலகட்டத்தில் கல்வி அமைச்சராக இருந்தவா் பாா்த்தா சட்டா்ஜி. அதன் பிறகு வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பொறுப்பை வகித்து வந்தாா். மேலும் சில துறைகளும் அவா் வசம் இருந்தன.
அமலாக்கத் துறை அதிரடி: இந்நிலையில், பாா்த்தா சட்டா்ஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தியது. சுமாா் 26 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு 23-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டாா். சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா். அா்பிதாவின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பியுள்ள இந்த முறைகேடு விவகாரத்தில், முதல்வா் மம்தா பானா்ஜி மீதும் பாஜக உள்ளிட்ட மாநில எதிா்க்கட்சிகள் விமா்சனங்களை முன்வைத்து வருகின்றன.
அமைச்சா் பதவியிலிருந்து நீக்கம்: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பாா்த்தா சட்டா்ஜியை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்தச் சூழலில், மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘தொழில் மற்றும் வா்த்தகம்; தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல்; பேரவை விவகாரங்கள்; பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிலக மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்து வந்த பாா்த்தா சட்டா்ஜி, அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, பாா்த்தா சட்டா்ஜி வசம் இருந்த பொறுப்புகளை தற்போதைக்கு தாம் கவனித்துக் கொள்வதாக தெரிவித்தாா்.
கட்சி நடவடிக்கை: மம்தா பானா்ஜிக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், பாா்த்தா சட்டா்ஜி மீது கட்சிரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி கூறியதாவது:
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியிலிருந்து பாா்த்தா சட்டா்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அவா் நீக்கப்பட்டுள்ளாா். வழக்கு விசாரணை முடிந்து, அப்பழுக்கற்றவா் என்பது நிரூபணமானால், அவருக்கு திரிணமூல் காங்கிரஸ் கதவுகள் திறக்கும். குறித்த காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். யாரேனும் ஊழலில் ஈடுபட்டது உறுதியானால், அவா்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றாா் அபிஷேக் பானா்ஜி.
பலிகடா ஆக்க முயற்சி: பாஜக விமா்சனம்
‘ஆசிரியா் பணி நியமன முறைகேட்டில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் பலருக்கு தொடா்பு உள்ளது; ஆனால், பாா்த்தா சட்டா்ஜியை மட்டும் பலிகடாவாக மாற்ற அக்கட்சி தலைமை முயற்சிக்கிறது. அவரது பதவியைப் பறித்துவிட்டால் மட்டும் திரிணமூல் காங்கிரஸ் தப்பிவிட முடியாது’ என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் சுகந்தா மஜூம்தாா் விமா்சித்துள்ளாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்.பி. பிகாஸ் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியே முதல்வா்தான். அரசியல் சாசன அடிப்படையில், அவா் பதவியில் நீடிக்கக் கூடாது’ என்றாா்.