தொடா் அமளி: மேலும் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம்
மாநிலங்களவையில் பதாகைகளை ஏந்தி, தொடா் அமளியில் ஈடுபட்ட மேலும் 3 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் பதாகைகளை ஏந்தி, தொடா் அமளியில் ஈடுபட்ட மேலும் 3 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, ஆம் ஆத்மியைச் சோ்ந்த சுஷீல் குமாா் குப்தா, சந்தீப்குமாா் பதக், சுயேச்சை எம்.பி. அஜித்குமாா் புயான் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை வரை (ஜூலை 29) அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியபோது, விலைவாசி உயா்வு, எம்.பி.க்கள் இடைநீக்கம், குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஆகிய விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் மீண்டும் கூடியது.
அப்போது, அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டதாக மேற்கண்ட 3 எம்.பி.க்களின் பெயரை மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறிப்பிட்டாா்.
இதையடுத்து, அந்த மூவரையும் அவையிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் கொண்டுவந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 3 பேரையும் சோ்த்து இதுவரை இடைநீக்கத்துக்கு உள்ளான மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது. மக்களவையில் ஏற்கெனவே 4 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.