இந்தியா

30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்குத் திருமணம்! நெஞ்சை கனக்கச் செய்யும் மரபு (விடியோ)

DIN


கர்நாடக மாநிலத்தில், பிறக்கும் போதே இறந்த மணமகனுக்கும், பிறக்கும் போதே இறந்த மணமகளுக்கும், அவர்களது சம்பிரதாயப்படி வெகுச் சிறப்பாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் பயனாளர் ஒருவர், இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அது தொடர்பான விடியோவையும், தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த டிவிட்டர் பயனாளர் கூறுகையில், தட்சிண கன்னடா பகுதியில் இப்படி வழக்கம் உள்ளது. அதாவது, தங்களது குடும்பத்தில் பிறக்கும் போதே ஏதேனும் ஒரு குழந்தை இறந்துவிட்டால், 30 ஆண்டுகளுக்குள், அதுபோல, பிறக்கும் போதே இறந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையுடன் தங்கள் மரபுப்படி திருமணம் செய்து வைப்பார்கள்.

நானும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஏன் இந்த திருமண நிகழ்வு டிவிட்டரில் இந்த அளவுக்கு வைரலாகியிருக்கிறது என்றால், மணமகன் ஏற்கனவே இறந்துவிட்டார். மணமகளும் கூட இறந்துவிட்டார். அவர்கள் இறந்து 30 ஆண்டுகள் ஆகிறது என்று பதிவிட்டுள்ளார்.

உயிரிழந்த அந்த இருவரின் குடும்பத்தினரும், வழக்கமான திருமணத்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். மணமகன் வீட்டார் மணமகள் வீட்டுக்குச் சென்று பெண் கேட்பார்கள். நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் வீட்டில் அல்லது மணமகள் வீட்டில் உறவினர்கள், சுற்றம், நட்பு என அனைவரையும் கூட்டி, வழக்கமான சம்பிரதாயங்கள் படி திருமணம் நடக்கிறது.

மணமகன் வீட்டார், கூரைப் புடவை எடுத்து மணமகள் வீட்டாரிடம் கொடுக்கிறார்கள். மணமக்களுக்கு எடுத்த ஆடைகளை நாற்காலியில் வைத்து, பூ உள்ளிட்டவை கொண்டு அலங்காரம் செய்து தாலி கட்டும் நிகழ்வு நடக்கிறது.

பிறகு, மணமகளின் பெற்றோர், கூரைப் புடவை வைத்திருக்கும் தட்டை எடுத்து, தனது மகளை உங்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி மணமகனின் பெற்றோரிடம் வழங்குகிறார்கள். தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தை உயிரோடு இருந்திருந்தால் அதனை மணமுடித்துக் கொடுக்கும்போது எப்படி உணர்ச்சிவயப்படுவார்களோ அவ்வாறே பெற்றோர் கண்கள் கலங்குகின்றன. ஆனால் என்ன பெற்றப் பெண் இல்லையே என்ற வருத்தம்தான் மேலோங்கிறது.

பிறகு மணமகன் - மணமகள் இருவரும் தம்பதி சமேதராய் மணமகன் வீட்டிற்கு அடிமிதிக்கும் சம்பிரதாயம் வெகு சிறப்பாக நடக்கிறது. மணமக்களுக்கு அளிக்கப்படும் அதே பிரமாண்ட வரவேற்பு குறையின்றி நடக்கிறது.
 

இறந்தவர்களுக்குத்தான் திருமணம் நடைபெறுகிறதா என்று சந்தேகிக்கும் வகையில், இந்தத் திருமணம் எந்த சோகமோ அழுகையோ இன்றி வழக்கமான உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியோடு நடத்தப்படுகிறது.

அது மட்டுமல்ல, பெண்ணை அலங்கரிக்க நேரம் கொடுப்பது, மாப்பிள்ளை அலங்காரமாகி முன்னரே திருமணம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டு, நேரமாகிறது என்று குரல் கொடுப்பது என அனைத்தும் இங்கு நடக்கிறது. மணமக்கள் அணியும் ஆடையே இங்கு மணமக்களாகக் கொண்டாடப்படுவது ஒன்று மட்டுமே மனதை கனக்கச் செய்வதாக உள்ளது. எனினும், இறந்த உயிர்களுக்கும் திருமணம் நடத்திப் பார்க்கும் இந்த மரபு பலருக்கும் ஆனந்தம் கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.

நன்றி: விடியோ அன்னிஅருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT