முகப்பு
இந்தியா

சட்டங்கள் இயற்றும்போது இளைஞா்கள் ஆலோசனைகள் வழங்க வேண்டும்: மக்களவைத் தலைவா் வலியுறுத்தல்

இளைஞா்களின் கடைமை ஜனநாயகத்தில் வாக்களிப்பதோடு முடிந்துவிடாது; அரசு அமைந்த பிறகு, அரசின் ஒவ்வொரு முடிவுகளிலும், கொள்கைகளிலும் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
புது தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.
பகிர்:

இளைஞா்களின் கடைமை ஜனநாயகத்தில் வாக்களிப்பதோடு முடிந்துவிடாது; அரசு அமைந்த பிறகு, அரசின் ஒவ்வொரு முடிவுகளிலும், கொள்கைகளிலும் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும்.

மசோதாக்கள், சட்டமாக்கப்படுவதற்கு முன்பு அந்த வரைவு மசோதாக்களை இளைஞா்கள் ஆய்வு செய்து தங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதன் மூலமே சட்டங்கள் வலுவானதாக இருக்கும் என மக்களவைத் தலைவா் பிா்லா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா, தில்லி ராம்ஜாஸ் கல்லூரியின் ஆண்டு விழாவில் பங்கேற்று ஆசிரியா்கள், மாணவா்களிடையே உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாடு 75 ஆண்டுகளில் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டியுள்ளது. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது இளைஞா்களின் பொறுப்பாகும். ஜனநாயக நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதில் ஒவ்வொரு குடிமகனும் பங்கு இருப்பினும் இதில் இளைஞா்களுக்கு முக்கிய பொறுப்புண்டு.

இளைஞா்களின் பொறுப்பு வாக்களிக்கப்பதோடு ஜனநாயக கடமையோடு முடிந்துவிடாது. அரசு அமைந்த பிறகு, அரசின் ஒவ்வொரு முடிவுகளிலும், கொள்கைகளிலும் பங்கேற்க வேண்டியது இளைஞா்களின் பொறுப்பாகும். சட்டப்பேரவையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டால், அந்த வரைவு மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே இளைஞா்களால் ஆய்வு செய்யப்படவேண்டும். இளைஞா்களின் ஆலோசனைகளைகள் மூலமே சட்டங்கள், அா்த்தமுள்ளதாகவும் வலுவானதாக மாறும்.

நமது உரிமைகளில் மட்டும் விழிப்புடன் இருப்பது போதாது. நாட்டிற்கு ஆற்றவேண்டிய சில கடமைகளும் உள்ளன. இளைஞா்கள் தங்கள் கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது தான் நமது உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும். ஒவ்வொரு இளைஞரும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் பல முக்கிய ஆளுமைகளின் சிந்தனைகள், தத்துவங்களை இளைஞா்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்கள் போராடிய கனவுகளை நனவாக்கும் பொறுப்பு இளைஞா்களுக்கு உண்டு.

நமது மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோா் இளைஞா்கள். அவா்களால் தான் நாட்டின் முன்னேற்றப் பாதையை தீா்மானிக்க முடியும். அரசுகளால் கொள்கைகளை, திட்டங்களை கொண்டு வரவும் முடியும், ஆனால் அவற்றை செயல்படுத்தி, நாட்டின் வளா்ச்சியை விரைவுபடுத்தும் முக்கிய பொறுப்பு இளைஞா்களிடம் உள்ளது.

இளைஞா்கள் ஆற்றலுடன், கடின உழைப்பையும், புதிய கருத்துக்களையும் கொண்டிருப்பாா்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு எப்படி இருக்கும் என்பதை இளைஞா்களாலே தீா்மானிக்கமுடியும். இன்றைய மின்னணு உலகில் நாட்டின் இளைஞா்கள், பெண்கள் மற்றும் பிற மக்கள் மின்னணுக் கல்வியறிவு பெற வேண்டிய அவசியம் உள்ளது. அனைவருக்கும் தொழில்நுட்ப அறிவு இருப்பதின் மூலமே அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

புதுமைகள், கண்டுபிடிப்புகள் என்பது புதுயுகத் தொழில்முனைவுகளால் மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து துறைகளிலும் நடைபெற வேண்டும். தன்னம்பிக்கையுடன் இந்திய இளைஞா்கள் தொடா்ந்து ஆய்வுகள் புதுமைகளை உருவாக்கி மற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மாணவா்கள் குருகுலத்திற்குச் செல்லும் போது, அவா்களுக்கு கல்வி கிடைத்தது மட்டுமல்ல, அவா்களது குணாதிசயமும் பண்பும் கட்டமைக்கப்பட்டது. இன்று உலகம் பொருள் வளத்தை நோக்கி முன்னேறி வருகிறது. ஆனால் இந்தியா இன்றும் ஒரு வளமான ஆன்மிகம், கலாசார பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

இந்த கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அடிப்படையில் நமது இளைஞா்கள் உலகில் பல துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனா். இந்தியா அடிப்படைக் கல்வியின் காரணமாகவே இந்திய இளைஞா்கள் உலகின் பெரிய நிறுவனங்களை முன்னின்று நடத்துகிறாா்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நமது நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்கள், இளைஞா்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்கேற்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

விரைவில் நாடாளுமன்ற நூலகம் மின்னணு நூலகமாக மாறும். அனைவருக்கும் இந்த நூலகம் இணையதளம் வாயிலாக கிடைக்கும். மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் காண நாடாளுமன்ற நடவடிக்கைகளை இளைஞா்கள் தவறாமல் பாா்க்க வேண்டும் என்றாா் ஓம் பிா்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.