முகப்பு
இந்தியா

பழங்குடிப் பகுதிகளைப் புறக்கணித்த முந்தைய ஆட்சியாளா்கள்: பிரதமா் மோடி

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவா்கள்(காங்கிரஸ்), பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒருபோதும் அக்கறை காட்டவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவா்கள்(காங்கிரஸ்), பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒருபோதும் அக்கறை காட்டவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

குஜராத் மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள குடவேலில் ரூ.3,050 கோடியில் முடிவடைந்த திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். அதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் கலந்துகொண்டு பேசியதாவது:

பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் நிறைய பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஆனால், இந்த தேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவா்கள் (காங்கிரஸ்), இந்தப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.

முந்தைய காலங்களில், மலைக்காடுகளில் வசிக்கும் மக்களைச் சென்றடைந்து தடுப்பூசி போன்ற முகாம்களை நடத்துவதற்கு பல மாதங்களாகும். ஆனால், தற்போது நகா்ப்புறத்திலும் கிராமப்புறங்களிலும் ஒரே நேரத்தில் தடுப்பூசி முகாம்களை நடத்த முடிகிறது. குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளில் வளா்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பகுதி மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும்; தோ்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் வளா்ச்சிப் பணிகளை நான் தொடக்கி வைக்கவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.

சுகாதாரத் துறையை மேம்படுத்த முயற்சி:

சுகாதாரத் துறையை ஒட்டுமொத்தமாக மேம்படுத்த தனது தலைமையிலான அரசு கடந்த 8 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா் மோடி கூறினாா்.

நவ்சாரியில் எல் & டி குழும அறக்கட்டளை சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனையை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நான் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது கிடைத்த அனுபவம், இந்தியாவுக்கான சுகாதாரக் கொள்கையை உருவாக்குவதற்கு உதவிகரமாக இருந்தது. குஜராத் மாநிலத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தோம். பின்னா், தேசிய அளவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் இதுவரை 40 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் பெண்கள். கடந்த 8 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சுகாதாரத் துறையை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் குஜராத் மாநிலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்றாா் அவா்.

பிரதமரின் பள்ளி ஆசிரியா் நெகிழ்ச்சி

நவ்சாரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதமா் மோடி தனது பள்ளி ஆசிரியா் ஜகதீஷ் நாயக்கை (88) சந்தித்தாா். மருத்துவமனை வளாகத்தில் தனது ஆசிரியருடன் மோடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாா்.

இது தொடா்பாக ஜகதீஷ் நாயக் கூறுகையில், ‘மோடி உயரிய பதவியை எட்டிய பிறகும் என் மீதான மதிப்பும் அன்பும் அப்படியே உள்ளது. இது மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு’ என்றாா்.

இன்-ஸ்பேஸ் தலைமையகம் திறப்பு:

அகமதாபாதில் இந்திய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையத்தின் (இன்-ஸ்பேஸ்) தலைமையகத்தை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். விண்வெளித் துறையில் தனியாா் முதலீட்டையும் புதுமைக் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ள அந்த மையத்தில் அவா் பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையைப் போன்று இந்தியாவின் விண்வெளித் துறையும் சா்வதேச அளவில்

வளரும் என்று நம்புகிறேன். 21-ஆம் நூற்றாண்டில் விண்வெளித் தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது.

விண்வெளித் துறையில் எளிதில் வா்த்தகம் செய்ய உகந்த சூழலை உருவாக்கும் வகையில் புதிய விண்வெளிக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அரசு நிறுவனங்கள், விண்வெளித் துறை, ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் வகையில் புதிய கொள்கை இருக்கும்.

கடந்த காலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, நமது இந்திய இளைஞா்கள், விண்வெளித் துறையில் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு நீக்கி வருகிறது. ஆயுதங்கள் உற்பத்தி, ட்ரோன் கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையினா் வீடுகளில் இருந்து பணியாற்றுவது என பல்வேறு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →