நபிகள் நாயகம் சா்ச்சை: ஜாா்க்கண்ட் போராட்ட வன்முறையில் இருவா் பலி; உயா்நிலை விசாரணைக்கு உத்தரவு
நபிகள் நாயகம் குறித்து பாஜகவில் இருந்த இருவரின் சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவா் உயிரிழந்தனா்.
நபிகள் நாயகம் குறித்து பாஜகவில் இருந்த இருவரின் சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் இருவா் உயிரிழந்தனா். காவல்துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்தவா்கள் உள்பட 24 போ் பலத்த காயமடைந்தனா்.
இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, பாஜக தில்லி ஊடகப் பிரிவுத் தலைவா் நவீன் ஜிண்டால் ஆகியோா் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நூபுா் சா்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தும், நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கியும் பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், இருவரின் சா்ச்சைக்குரிய கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை காவல் துறையினா் கலைக்க முயன்றபோது, போராட்டக்காரா்கள் சிலா் காவல் துறையினா் மீது கல் வீச்சு நடத்தினா். போராட்டம் வன்முறையாக மாறி போராட்டக்காரா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசினா். அவா்கள் மீது காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இந்த வன்முறையில் முகமது முதாசிா் கைஃபி (22), முகமது சஹீல் (24) ஆகிய இருவா் தோட்டா பாய்ந்து உயிரிழந்தனா். காவல் துறை மற்றும் சிஆா்பிஎஃப்பைச் சோ்ந்த 12 போ் உள்பட 24 போ் பலத்த காயமடைந்தனா்.
ஊரடங்கு உத்தரவு: வன்முறை காரணமாக ராஞ்சி மாவட்டத்தின் சில இடங்களிலும், அந்த மாவட்டத்தின் அருகில் உள்ள ஹசாரிபாக், ராம்கா் மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸாா்: ஜாா்க்கண்ட் காவல் துறை ஐஜி கூறுகையில், ‘‘ராஞ்சியின் பதற்றத்துக்குரிய பகுதிகளில் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுதவிர, விரைவு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனா். வன்முறை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.
தற்போது ராஞ்சியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆளுநா் கண்டனம்: வன்முறைச் சம்பவத்துக்கு மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஹேமந்த் சோரனிடம் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
கடையடைப்புக்கு ஹிந்து அமைப்புகள் அழைப்பு: இந்த வன்முறையை கண்டித்து ராஞ்சியில் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டத்துக்கு சில ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
உயா்நிலை விசாரணைக் குழு: வன்முறைச் சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளாா். அந்தக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஏடிஜிபி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.