இந்தியா

'ராஜிநாமா செய்': பினராயி விஜயன் பயணித்த விமானத்தில் கோஷம்

DIN


கேரள முதல்வர் பினராயி விஜயன் பயணித்த விமானத்தில், 'ராஜிநாமா செய்' என இருவர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், பினராயி விஜயன் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். கேரளம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பினராயி விஜயன், தனது சொந்த ஊரான கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று (திங்கள்கிழமை) விமானம் மூலம் சென்றார். அப்போது, விமானத்திலிருந்த இருவர், பினராயி விஜயனை ராஜிநாமா செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். அவர்கள் இருவரையும் தள்ளி ஒருவர் அமரவைக்கிறார்.

அவர்களைத் தள்ளி அமரவைத்தவர் இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இ.பி. ஜெயராஜன் என்பது பின்னர் தெரியவந்தது. இவர் பினராயி விஜயன் தலைமையிலான முதல் ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

பின்னர் கிடைத்த தகவலின்படி, மூன்று இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அதே விமானத்தில் டிக்கெட் பதிவு செய்துள்ளனர். இவர்களைப் பார்த்த காவலர்கள் விசாரணைக்காக நிறுத்தியுள்ளனர். புற்றுநோய் நோயாளியுடன் செல்வதாகக் குறிப்பிட்டதால், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனிடையே ஜெயராஜன் கூறுகையில், "இந்தக் காட்சிகள் எப்படி வெளியே வந்தது எனத் தெரியவில்லை. அங்கு இரண்டு, மூன்று பேர் மது அருந்தியிருந்தனர். இப்படித்தான் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளுமா?" என்றார்.  

கண்ணூர் விமான நிலைய அதிகாரிகள், விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் சரிபார்த்து தங்களது பணியைச் செய்ததாகக் கூறினர். மது அருந்தியதாக ஜெயராஜன் கூறியதை இவர்கள் மறுத்தனர்.

பினராயி விஜயன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணித் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் குவிந்து அவருக்கு சாதகமாக கோஷங்களை எழுப்பினர். இதேபோல, காங்கிரஸ் மற்றும் பாஜக இளைஞரணித் தொண்டர்களும் சில இடங்களில் கருப்புக் கொடி காட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT