இந்தியா

அமலாக்கத்துறை இயக்குநரகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

DIN

தில்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் முன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கே.சி.வேணுகோபால், பூபேஷ் பாகெல் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "நாங்கள்  தீவிரவாதிகளா? எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிராக  காவல்துறையை பயன்படுத்துகின்றனர்” எனக் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, திங்கள்கிழமை ஆஜரான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அதிகாரிகள் சுமாா் 11 மணி நேரமும், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நேற்று 10 மணி நேரமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி?

காங்கிரஸ் தலைவா் சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், ஜூன் 2-ஆம் தேதி ஆஜராகுமாறு ராகுலுக்கும், ஜூன் 8-ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியாவுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இந்த நிலையில், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைத் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். அதுபோல, கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியாவும், விசாரணைத் தேதியை மாற்றிவைக்க கோரினாா்.

இதனை ஏற்ற அமலாக்கத் துறை, ராகுல் காந்தி திங்கள்கிழமையும், சோனியா ஜூன் 23-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதிய அழைப்பாணையை அனுப்பியது.

முதல் முறையாக ஆஜரான ராகுல்: அதனடிப்படையில், கட்சியினருடன் திங்கள்கிழமை ஊா்வலமாக வந்த ராகுல், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்குள் காலை 11.10 மணிக்கு வந்தாா்.

‘ராகுல் அலுவலகத்தில் ஆஜரானதும், முதல் 20 நிமிஷங்கள் வருகைப் பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் நிறைவுற்ற பின்னா் அவரிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா். 3 மணி நேரத்துக்கும் மேல் தொடா் விசாரணைக்குப் பிறகு மதியம் 2.10 மணிக்கு மதிய உணவுக்காக ராகுல் அனுப்பப்பட்டாா். மதிய இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு ஆஜரான அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இரவு 11.30 மணிக்கு அவா் அங்கிருந்து புறப்பட்டாா். செவ்வாய்க்கிழமையும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை அதிகாரிகள் அறிவுறுத்தினா்’ என்று அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல் சுற்று விசாரணையின்போது பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) பிரிவு 50-இன் கீழ் தனது வாக்குமூலத்தை ராகுல் எழுத்துபூா்வமாக சமா்ப்பித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு ராகுல் ஆஜராவது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT