ஜிஎஸ்டி விகிதங்கள் மறுசீரமைப்பு: அமைச்சா்கள் குழு கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மறுசீரமைப்பு செய்வதில் மாநில அமைச்சா்கள் அடங்கிய குழுவின் கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மறுசீரமைப்பு செய்வதில் மாநில அமைச்சா்கள் அடங்கிய குழுவின் கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
ஜிஎஸ்டியின் கீழ், 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்குகளில் பல்வேறு பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இதில் ஆடம்பரப் பொருள்கள், புகையிலை உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டியுடன் கூடுதல் வரியும் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதங்களை மறுசீரமைத்து வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைப் பரிந்துரைக்க கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் 7 போ் கொண்ட மாநில அமைச்சா்கள் குழுவை (ஜிஓஎம்) கடந்த ஆண்டு மத்திய அரசு அமைத்தது.
அந்தக் குழுவின் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்களை மாற்ற குழுவில் இடம்பெற்றுள்ள சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விகிதங்களை மறுசீரமைப்பு செய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
எனினும் கடந்த ஆண்டு நவம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து ஒற்றுமை குறித்த நிலவர அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் ஜிஓஎம் சமா்ப்பிக்க உள்ளது. இறுதி அறிக்கையை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு அந்தக் குழு கோரவுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் ஜூன் 28, 29-ஆம் தேதிகளில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.