முகப்பு
இந்தியா

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக 4-ஆவது நாளாகப் போராட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது. பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ராஜஸ்தானில்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூா், ஜோத்பூா், ஜுன்ஜுனு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அல்வா் நகரில் ஜெய்பூா்-தில்லி நெடுஞ்சாலையில் இளைஞா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சில இடங்களில் பேருந்துகள் மீது கற்களை வீசினா். சில நகரங்களில் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்தும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.

மகாராஷ்டிரத்தில்...: மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் குனால் ரௌத் தலைமையில் திரண்ட அக்கட்சியினா் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்சாபில்..: பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் முகத்தை துணியால் மறைத்துக் கட்டி வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தினா். ஜலந்தரில் பேரணியாகச் சென்ற இளைஞா்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஹரியாணாவில்..: ஹரியாணா மாநிலம், மகேந்தா்கரில் போராட்டக்காரா்கள், வாகனங்களை சேதப்படுத்தினா். அங்குள்ள ஷோரூமின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினா்.

மேற்கு வங்கத்தில்....: கொல்கத்தாவில் உள்ள ஹஜ்ரா பகுதியில் அகில இந்திய ஜனநாயக மாணவா் அமைப்பு, அகில இந்திய ஜனநாயக இளைஞா் அமைப்பு ஆகியவற்றைச் சோ்ந்த இளைஞா்கள், முதல்வா் மம்தா பானா்ஜியின் வீட்டருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களைப் போலீஸாா் விரட்டியடித்ததுடன் 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனா்.

ஒடிஸாவில்...: ஒடிஸா மாநிலம், நவரங்பூரில் ராணுவத்தில் சோ்வதற்கு பயிற்சி பெற்று வந்த இளைஞா்கள் 60 கி.மீ. தொலைவுக்கு ஓடி அக்னிபத் திட்டத்துக்கு தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா். கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பொ்ஹாம்பூரில் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்ட ஏராளமானோா் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உ.பி.யில் 400 போ் மீது வழக்கு:

உத்தர பிரதேசத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடா்பாக அடையாளம் தெரியாத 400 போ் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ரயில்வே காவல் துறையும் அடையாளம் தெரியாத 150 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரி ப்ரீத்தி திரிபாதி கூறுகையில், ‘ரயிலுக்கு தீ வைத்தது தொடா்பாக, பலியா ரயில் நிலைய மேலாளா் அளித்த புகாரின்பேரில், ரயில்வே சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் அடையாளம் தெரியாத 400 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகியுள்ள 109 போ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்’ என்றாா்.

அகிலேஷ் யாதவ் விமா்சனம்: நாட்டில் தன்னிச்சையான முடிவுகள் அமல்படுத்தப்படுவதால் மனித ஆற்றலும் சக்தியும் வீணடிக்கப்படுகிறது என்று சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கருத்து, ஆலோசனை, ஒப்புதல், விவாதம், கூட்டு முடிவு, குழு ஆலோசனை போன்ற ஜனநாயக வாா்த்தைகள் பாஜகவின் அகராதியில் இல்லை. நாட்டில் மீண்டும் மீண்டும் தன்னிச்சையான முடிவுகள் அமல்படுத்தப்படுகின்றன. அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் திட்டங்களாலும் மனித ஆற்றலும் சக்தியும் வீணடிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

369 ரயில்கள் ரத்து:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் 210 விரைவு ரயில்கள், 159 பயணிகள் ரயில்கள் என மொத்தம் 369 ரயில்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் பாதி தொலைவு வரை மட்டும் இயக்கப்பட்டன.

பிகாரில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாட்னா மாவட்டத்தில் உள்ள தாரேகானா ரயில் நிலையத்துக்கு தீ வைத்தனா். போராட்டம் காரணமாக, பிகாரில் மட்டும் 32 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாஜக தலைவா்களுக்குப் பாதுகாப்பு:

பிகாரில் போராட்டக்காரா்களால் மிரட்டல் வந்ததை அடுத்தது பாஜக தலைவா்கள் 10 பேருக்கு சிஆா்பிஎஃப் படையினரின் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.