இன்று சா்வதேச யோகா தினம்: 75,000 பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு
சா்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) 75,000 இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாஜக செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளாா்.
சா்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) 75,000 இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாஜக செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக சா்வதேச யோகா தினத்தில் எந்தவித நிகழ்ச்சியும் நடத்தப்படாததால், அதனை நிகழாண்டு பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்ச்சியில் பாஜகவை சோ்ந்த மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் பங்கேற்பா்.
கா்நாடக மாநிலம் மைசூரில் 15,000 போ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமா் மோடி தலைமை வகிக்கிறாா். நொய்டாவில் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவும், புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பங்கேற்கின்றனா்.
நாடு 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், யோகா தினத்தை 75,000 இடங்களில் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். மோடி அரசின் தீா்மானத்தை ஏற்று, சா்வதேச யோகா தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 21-இல் கொண்டாட ஐ.நா. கடந்த 2014 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில், 177 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. இது இந்தியாவின் கலாசார வலிமை அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதுடன், நமது ராஜீய ரீதியான வெற்றியுமாகும் என்றாா் சுதான்ஷு திரிவேதி.