முகப்பு
இந்தியா

பிரபஞ்சத்துக்கு அமைதியைத் தருகிறது யோகா: பிரதமர் நரேந்திர மோடி

பிரபஞ்சத்துக்கு யோகாசனம் அமைதியைத் தருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
பகிர்:

பிரபஞ்சத்துக்கு யோகாசனம் அமைதியைத் தருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. சபை சார்பில் 2015-ஆம் ஆண்டுமுதல் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மைசூரில் 8-ஆவது சர்வதேச யோகா தினம் அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது.
 இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச யோகா தின விழாவைத் தொடக்கிவைத்து, 15,000 பேருடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
 முன்னதாக அவர் பேசியதாவது: யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவில் இருந்து கிடைக்கும் அமைதி தனிநபருக்கானது அல்ல; சமூகம், நாடு, உலகம் மற்றும் பிரபஞ்சத்துக்கானது. இதை சிலர் அதீத சிந்தனையாகக் கருதலாம். ஆனால், நமது நாட்டின் முனிவர்கள் இதற்கான விடையை மந்திரங்கள் வாயிலாக அளித்துள்ளனர். முழு பிரபஞ்சமும் நமது உடல், ஆன்மாவில் இருந்து தொடங்குவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
 பிரபஞ்சம் நம்மில் இருந்து தொடங்குகிறது. நம்மில் இருக்கும் அத்தனையையும் யோகா உணர்த்துகிறது. அதன்மூலம் தெளிவை ஏற்படுத்துகிறது. சுய விழிப்புணர்வில் இருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது. அது உலக விழிப்புணர்வுக்கு வழிவகுக்கிறது. நம்மை, நமது உலகத்தை நாம் அறிந்துகொள்ளும்போது, நம்மிலும், உலகத்திலும் மாற்ற வேண்டியவை குறித்த தெளிவு நமக்கு கிடைக்கிறது. அது தனிநபர் பிரச்னையாக இருக்கலாம்; அல்லது பருவநிலை மாற்றம், சர்வதேச சச்சரவுகள் போன்ற உலகப் பிரச்னையாக இருக்கலாம்.
 மைசூரு போன்ற ஆன்மிக மையங்கள், பல நூற்றாண்டுகளாக யோகாவின் ஆற்றலை வளர்த்தெடுத்து வந்துள்ளன. அந்த ஆற்றல் இன்றைக்கு உலக சுகாதாரத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. யோகா நமது வாழ்க்கையின் போக்காகவே மாறியுள்ளது. இதை குறிப்பிட்ட காலம் அல்லது இடத்துக்கானதாக சுருக்கிவிடக் கூடாது.
 கடந்த இரு ஆண்டுகளாக உலகம் கரோனா பெருந்தொற்றால் அவதியுற்றிருந்த நிலையில், நாடு, துணைக் கண்டம், கண்டங்களைக் கடந்து யோகா தினம் குறித்த எழுச்சி தெரிகிறது. இது நமது நாட்டின் ஆற்றலை உறுதிப்படுத்துகிறது. யோகா தினம் ஒரு சர்வதேச விழாவாக மாறியுள்ளது.
 நிகழாண்டுக்கான யோகா தின விழா, "மனிதநேயத்துக்கான யோகா' என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது. யோகாவின் நற்செய்தியை மனிதகுலத்துக்குக் கொண்டு சென்றதற்காக ஐ.நா. சபைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.
 விழாவில் கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்வானந்த சோனாவால், மைசூரு மன்னர் குடும்பத்து பட்டத்து ராணி பிரமோதாதேவி, பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 மன்னர் குடும்பம் அளித்த விருந்தில் பங்கேற்ற பிரதமர்
 கர்நாடகத்துக்கு இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி, மைசூரு அரண்மனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்றார். அங்கிருந்து தசரா கண்காட்சித் திடலுக்குச் சென்று "புதுமையான எண்ம யோகா கண்காட்சியை' தொடக்கி வைத்தார்.
 அதைத் தொடர்ந்து, அரண்மனைக்குச் சென்ற பிரதமர் மோடியை மைசூரு மன்னர் குடும்பத்தின் பட்டத்து ராணி பிரமோதாதேவி, பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர்.
 இந்த விருந்தில் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக இட்லி, வடை, தோசை, உப்புமா உள்ளிட்ட 12 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மைசூருக்குப் புகழ்சேர்த்த "மைசூரு பாகு', "மசாலா தோசை' ஆகியனவும் விருந்தில் இடம்பெற்றிருந்தன.
 பின்னர், பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு கேரளம் சென்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →