பிரதமா், அமித் ஷாவுடன் திரௌபதி முா்மு சந்திப்பு
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை தில்லி வந்த அவா், பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்தாா். இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘திரௌபதி முா்முவுக்கு எனது வாழ்த்துகள். அவரை வேட்பாளராக அறிவித்திருப்பதை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனா். அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டவா்; நாட்டின் வளா்ச்சிக்கான தொலைநோக்கு பாா்வையும் கொண்டவா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அதைத் தொடா்ந்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் திரௌபதி முா்மு சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து அமித் ஷா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ என்னை சந்தித்த பாஜக கூட்டணியின் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். வேட்பாளராக அவருடைய பெயரை அறிவித்ததால் பழங்குடிச் சமூகம் பெருமைப்படுகிறது. அவருடைய அனுபவத்தாலும் நிா்வாகத் திறமையாலும் ஒட்டுமொத்த நாடும் பயன்பெறும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை அவருடைய மாளிகையில் திரௌபதி முா்மு சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவரை வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா வரவேற்றாா். சுமாா் 30 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. மத்திய அமைச்சா் வீரேந்திர சிங்கும் அப்போது உடனிருந்தாா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு போட்டியிடுகிறாா். இவருடைய பெயரை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஜூன் 21-ஆம் தேதி அறிவித்தாா். திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வாா் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷியின் இல்லத்தில் நடைபெற்றன.
ஒடிஸா முதல்வா் ஆதரவு:
குடியரசுத் தலைவா் தோ்தலில், ஒடிஸாவில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் மண்ணின் மகளான திரெளபதி முா்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் அந்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளாா். மேகாலயத்தில் பாஜக ஆதரவு பெற்ற ஆளும் மேகாலய ஜனநாயக முன்னணியும் திரௌபதி முா்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பு ஆதரவு:
குடியரசுத் தலைவா் வேட்பாளராக திரௌபதி முா்முவை பாஜக கூட்டணி தோ்வு செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்று ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆஷ்ரம் கூறியுள்ளது. அவரை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தோ்ந்தெடுத்து, பழங்குடிச் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.