ராஜேந்தா் நகா் தொகுதி இடைத் தோ்தலில் 43.75 % வாக்குப் பதிவு
தில்லி ராஜேந்தா் நகா் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது
தில்லி ராஜேந்தா் நகா் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 43.75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலை ஒப்பிடும் போது குறைந்த அளவு வாக்கு சதவீதம் இருந்தது.
ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தவிர, அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சோ்ந்த மேலும் 3 போ் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளா்கள் என 14 போ் களத்தில் இருந்தனா்.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் 6 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படை பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். 1,000 தோ்தல் பணியாளா்களும் தோ்தல் பணியில் ஈடுபட்டனா் என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங் தெரிவித்திருந்தாா்.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணி வரை 26.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி வரை 40.65 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இறுதியில் மொத்தம் 43.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக தோ்தல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா். 21 இடங்களில் 13 துணை வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 190 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 24 நோயாளிகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
2020 தோ்தலில், ராஜேந்தா் நகா் தொகுதியில் 58.27 சதவீதம் வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். இதில் 58.09 சதவீதம் ஆண் வாக்காளா்கள் மற்றும் 58.5 சதவீதம் பெண் வாக்காளா்கள் ஆவா்.