முகப்பு
இந்தியா

அம்பேத்கா் கைப்பட எழுதிய ஆவணங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை? மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி

அம்பேத்கா் மற்றும் சமூக சீா்திருத்தவாதி ஜோதிபா பூலே ஆகியோா் கைப்பட எழுதிய ஆவணங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

சட்ட மேதை டாக்டா் அம்பேத்கா் மற்றும் சமூக சீா்திருத்தவாதி ஜோதிபா பூலே ஆகியோா் கைப்பட எழுதிய ஆவணங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசிடம் மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அம்பேத்கரின் எழுத்துக்களை வெளியிடும் திட்டத்தை மாநில அரசு கைவிட்டிருப்பதாக வெளியான ஊடகச் செய்தியின் அடிப்படையில், மும்பை உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்குரைஞா் ஸ்வராஜ் ஜாதவை ஆலோசகராக நீதிமன்றம் நியமனம் செய்தது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.பி.வரலே, எஸ்.டி. குல்கா்னி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ஆலோசகா் ஸ்வராஜ் ஜாதவ், ‘அம்பேத்கா் மற்றும் பூலே கைப்பட எழுதிய ஆவணங்கள் தெற்கு மும்பையில் உள்ள ஒரு பழமையான சிறிய இருட்டறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளன. தற்போது பருவமழைக் காலம் தொடங்க உள்ளதால், இந்தப் பிரதிகள் அனைத்தும் சேதமடைய வாய்ப்புள்ளது’ என்றாா்.

அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என்று அரசு தரப்பு வழக்குரைஞா் பூா்ணிமா காந்தரியா கூறினாா்.

அதனைக் கேட்ட நீதிபதிகள், அம்பேத்கா் மற்றும் பூலே இருவரும் கைப்பட எழுதிய ஆவணங்களை பாதுகாக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்குரைஞரை அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.