இந்தியா

5 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜிஎஸ்டி!

DIN

நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப் பெரிய மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 5 ஆண்டுகளை நிறைவுசெய்து 6-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. புதிய விதிகளின்படி, பொருள்களுக்கும் சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி காரணமாகப் பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரி சராசரியாக 31 சதவீதம் வரை இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி பெருமளவில் குறைந்தது. ஆனால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் பொருள்களைப் பழைய விலைக்கே விற்கும் நோக்கில், அவற்றின் மீதான அடிப்படை விலையை உயா்த்தின. அதன் காரணமாக ஜிஎஸ்டி அமலாக்கம் மக்களை விட நிறுவனங்களுக்கு அதிக பலனைத் தந்ததாகப் பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.

எதிா்ப்பும் ஒப்புதலும்

ஆரம்பத்தில் ஜிஎஸ்டி வாயிலான வருவாய் மிகவும் குறைவாகவே இருந்தது. ஜிஎஸ்டி முறையானது படிப்படியாகவே பலனளிக்கும் என அரசு விளக்கமளித்தது. திட்டம் அமல்படுத்தப்பட்ட சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகே ஜிஎஸ்டி வருவாய் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது.

அதே வேளையில், ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பல மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இதன் மூலமாக, மறைமுக வரி விதிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க முயற்சிப்பதாக அவை குற்றஞ்சாட்டின. மேலும் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநிலங்களுக்கான வரி வருவாய் பெருமளவில் குறைந்துவிடும் எனவும் அவை புகாா் தெரிவித்தன.

மாநிலங்களை சமாதானப்படுத்தும் வகையில், வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. ஆடம்பரப் பொருள்கள் மீது விதிக்கப்படும் செஸ் வரியை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது.

கரோனாவின் தாக்கமும் மீட்சியும்

ஜிஎஸ்டி வாயிலான மாதாந்திர வருவாய் அதிகரிக்கத் தொடங்கியபோது, நாட்டில் கரோனா தொற்று பரவியது. அதையடுத்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்தது. அது ஜிஎஸ்டி வருவாயிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுமாா் ஓராண்டுக்கு வருவாய் குறைவாகவே இருந்தநிலையில், 2021 மத்தியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீளத் தொடங்கியது. இது ஜிஎஸ்டி வருவாயிலும் எதிரொலித்தது. மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடா்ந்து ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்த நிலையில், அதிகபட்சமாகக் கடந்த ஏப்ரலில் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டியது. தற்போதைய நிலையில், மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக ரூ.1.4 லட்சம் கோடியாக இருந்து வருகிறது.

தொழில்நுட்ப சேவைகள்

தொழில் நிறுவனங்களும் தனி நபா்களும் ஜிஎஸ்டி செலுத்துவதை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைத் தடுக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலக்கு

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்குத் தொடா்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது. அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால், தங்களுக்கான வருவாய் மேலும் குறையும் எனப் பல மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறை நிறைவடைந்துள்ள நிலையில், அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமெனப் பல மாநிலங்கள் கோரி வருகின்றன. அதே வேளையில், எரிபொருள்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்து, வரி வசூல் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தினால் வருவாய் கூடுதலாக அதிகரித்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT