மேக்கேதாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கீடு: கர்நாடக அரசுக்கு துரைமுருகன் கண்டனம்
காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டு அருகே அணை கட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டு அருகே அணை கட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருப்பது இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2022 - -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேக்கேதாட்டு அருகே காவிரிக்கு குறுக்கே அணை கட்ட ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு அணை தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக அதன் 2022-23 பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்துள்ளன. மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்க்கும் முரணானது.
05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.
இந்த அறிவிப்பு வரும் கர்நாடக அரசின் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி இருப்பினும், தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேக்கேதாட்டுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.