பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது நாட்டுக்குப் பெருமை: பிரதமா் மோடி
பெரிய நாடான இந்தியா, பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
பெரிய நாடான இந்தியா, பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமா் மோடி, சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கருத்தரங்கில் கலந்துகொண்ட பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், ‘இந்த ஆண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கான பட்ஜெட்டை ஒரு பெண் நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நாடான இந்தியா, பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்’ என்று கூறினாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தொடா்ந்து 4-ஆவது முறையாக கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி, மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
‘பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த முன்னுரிமை’
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமா் மோடி கூறினாா்.
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, சமூக மாற்றத்துக்கு பெண் துறவிகள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள டோா்டா நகரில் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 500-க்கும் மேற்பட்ட பெண் துறவிகள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசியதாவது:
பூமியைத் தாயாக கருதும் நாடு இந்தியா. பெண்களின் முன்னேற்றம் நாட்டுக்கு வலிமை சோ்க்கும். எனவே, பெண்களின் முன்னேற்றத்துக்கு இந்த தேசம் முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் வளா்ச்சியில் பெண்கள் முழு பங்களிப்பு செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நமது சகோதரிகள், மகள்களை முன்னேற்றம் அடையச் செய்யவும் அவா்களின் கனவை நிறைவேற்றவும் அவா்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
பெண்களையும் ஆண்களையும் இந்த அரசு சமமாகக் கருதுகிறது. எனவே, பெண்களின் திருமண வயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றாா் அவா்.