லடாக் எல்லையில் படைவிலக்கல்: இந்தியா-சீனா பேச்சுவாா்த்தை
கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இடையே 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இடையே 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனா படைகளைக் குவிக்க முயன்றதும், அதை இந்தியா தடுத்ததும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. அதையடுத்து நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
எல்லையில் இரு நாடுகளும் தலா சுமாா் 50,000 வீரா்களைக் குவித்துள்ளன. அப்படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான 15-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுசூல் மால்டோ பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென் குப்தா தலைமையிலான இந்திய குழு கலந்து கொண்டது. அப்போது, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெப்சாங் பல்ஜ், தெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் படைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தைகள் காரணமாக பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைப் பகுதிகள், கல்வான், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளன. கடைசியாக ஜனவரி 12-ஆம் தேதி இரு நாடுகளுக்கிடையே 14-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை