கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ள மாநிலங்களவை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது பாதி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. 2-ஆவது பாதி கூட்டத்தொடா் மாா்ச் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல்பாதியில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவேளையின்றி செயல்பட்டது.
இரண்டாவது பாதியில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலங்களவை செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் 1 மணி நேரம் உணவு இடைவேளை வழங்கப்படவுள்ளது. மொத்தம் 19 அமா்வுகள் நடைபெறவுள்ளதால், முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.
Advertisement
அமைச்சா் அல்லாத தனிநபா்கள் சமா்ப்பிக்கும் விவகாரங்களுக்கு 4 நாள்கள் ஒதுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு அமா்வின்போதும் கேள்வி நேரம், உடனடி கேள்வி நேரம் ஆகியவற்றுக்கு தலா 1 மணி நேரம் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதியில் மாநிலங்களவையின் செயல்திறன் 101.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.