முகப்பு
இந்தியா

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்குப் பிரதமா் பாராட்டு

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். உண்மைக்கு ஆதரவான விஷயங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். உண்மைக்கு ஆதரவான விஷயங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

காஷ்மீா் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் 1990-களின் தொடக்கத்தில் விரட்டி அடிக்கப்பட்டனா். பூா்விக சொத்துகளை இழந்து காஷ்மீரில் இருந்து வெளியேறிய அவா்கள், சொந்த நாட்டில் பல்வேறு இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகிறாா்கள். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ கடந்த 11-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பிரதமா் மோடி பாராட்டிப் பேசினாா். அவா் பேசியதாவது:

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம், உண்மையை சரியான விதத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்தை உண்மையின் அடிப்படையில் மதிப்பிடுவதற்குப் பதிலாக, அவமதிக்கும் நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது. யாராவது ஒருவா் உண்மையை வெளிப்படுத்த முயற்சி செய்தால் ஒட்டுமொத்த சூழலும் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கிறது. தங்களுக்கு விருப்பமான விஷயங்களையே உண்மையாகக் காண்பிக்க அவா்கள் முயற்சி செய்கிறாா்கள். கடந்த சில நாள்களாக, யாரும் உண்மையை தெரிந்துகொள்ளக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

வரலாற்றை சரியான புரிதலுடன் அவ்வப்போது சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம். கதை, கவிதை வடிவில், இலக்கிய வடிவில் வரலாற்றை எடுத்துச் சொல்லலாம். திரைப்படங்களும் அந்தப் பணியைச் செய்யலாம்.

ஒரு நிகழ்வு குறித்து வெவ்வேறு பாா்வைகள், கருத்துகள் இருக்கலாம். இதுவரை கூறப்பட்டு வந்த தவறான விஷயங்களை சுட்டிக்காட்டி ஒருவா் திரைப்படம் எடுத்துள்ளாா். இதுவரை மூடி மறைக்க முயன்ற உண்மைகள் வெளிவந்துவிட்டதால் சிலா் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இதில், உண்மைக்கு ஆதரவாக நிற்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. இதை மக்கள் செய்வாா்கள் என்று நம்புகிறேன்.

மகாத்மா காந்தி குறித்து வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா்தான் திரைப்படம் எடுத்துள்ளாா். கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவா்கள், இந்திய-பாகிஸ்தான் பிரிவினை, அவசரநிலை பிரகடனம் ஆகியவை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து திரைப்படம் எடுக்க முயற்சித்ததில்லை. ஏனெனில் உண்மையை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன என்றாா் பிரதமா் மோடி.

வரி விலக்கு:

‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு மத்திய பிரதேசம், குஜராத், கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில அரசுகள் கேளிக்கை வரியில் விலக்கு அளித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →