பேரறிவாளன் விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன்
மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மும்பை சிறையில் இருந்து சஞ்சய் தத் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்புடைய ஆவணங்கள் கோரி, பேரறிவாளன் தரப்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மகாராஷ்டிர தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தகவல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரிக்க பட்டியலிடப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த பிறகும், மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால் இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்களது மனுவை விரைந்து விசாரணைக்குப் பட்டியலிட மும்பை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனிடையே, அண்மையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் வேறு வழக்கில் ஆஜராகி இருப்பதாக அவரது தரப்பு வழக்குரைஞர் ரகுநாத சேதுபதி, நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.