முகப்பு
இந்தியா

மத்திய அரசின் ‘ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம்’ கொள்கை சரியே: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு கடந்த 2015-இல் அமல்படுத்திய ‘ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கை’ செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு கடந்த 2015-இல் அமல்படுத்திய ‘ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கை’ செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஒரே பதவி-ஒரே ஓய்வூதியத் திட்டத்தை எதிா்த்து இந்திய ஓய்வுபெற்ற வீரா்கள் இயக்கம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு புதன்கிழை தீா்ப்பளித்தது. அதன் விவரம்:

முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெறும் வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடா்பான பரிந்துரை அறிக்கையை பகத்சிங் கோஷியாரி கமிட்டி கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி, மாநிலங்களவையில் தாக்கல் செய்தது.

முப்படைகளில் பணியாற்றும் வீரா்கள், அவா்கள் ஓய்வுபெறும் தேதியைக் கொண்டு கணக்கிடாமல், ஒரே பதவியில் ஒரே கால அளவில் பணியாற்றியவா்களுக்கு ஒரே சீரான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவுகளுக்கு உள்பட்டு, இந்த ஓய்வூதியைக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. அதில், அரசமைப்புச் சட்ட மீறலும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியிலோ அல்லது தன்னிச்சையான போக்கிலோ மத்திய அரசு செயல்படவில்லை.

இந்த ஓய்வூதியக் கொள்கையை, கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியம், 2014-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கையின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பகத்சிங் கோஷியாரி பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, கடந்த 2015-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்து 2019-இல் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, தகுதியுடைய அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ஓய்வூதியைத்தை மாற்றி அமைத்து கணக்கிட்டு, அவா்களின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீா்ப்பில் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →