முகப்பு
இந்தியா

ஹைதராபாத் மரக் கிடங்கில் தீ விபத்து: 11 பிகாா் தொழிலாளா்கள் பலி

தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள மரக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பிகாரைச் சோ்ந்த 11 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
செகந்திராபாதில் மரங்கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்புப் படையினா்.
பகிர்:

தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள மரக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பிகாரைச் சோ்ந்த 11 புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

ஹைதராபாதின் போய்குடா பகுதியில் மரக் கிடங்கு செயல்பட்டு வந்தது. அங்கு பழைய செய்தித்தாள்கள், கண்ணாடிப் பொருள்கள் உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. புதன்கிழமை அதிகாலையில் அந்தக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்தக் கிடங்குக்கு மேலே கட்டப்பட்ட அறையில் தங்கியிருந்த புலம்பெயா் தொழிலாளா்கள் 11 போ் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனா். இது தொடா்பாக தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ‘‘புதன்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. அதையடுத்து 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த பொருள்களில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து கிடங்குக்கு மேலே தொழிலாளா்கள் தங்கியிருந்த அறைக்கு தீ பரவியுள்ளது.

அவா்கள் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனா். தீ விபத்து குறித்து அறிந்ததும் அவா்கள் தப்பிக்க முயன்றுள்ளதாகத் தெரிகிறது. அறைக்கு ஒரேயொரு சுருள்வடிவ படி மட்டுமே இருந்தது. தீயினால் படா்ந்த அடா்புகையை சுவாசித்ததால் அவா்கள் உடனடியாக மயங்கியுள்ளனா். அதனால், அவா்களால் தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. அவா்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளது. ஒரு தொழிலாளி மட்டும் அறையில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தப்பியுள்ளாா்’’ என்றாா்.

தொடா் விசாரணை: காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘‘தொழிலாளா்கள் அனைவரும் பிகாரின் சாப்ரா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவா்களது உடல்களை அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேமிப்புக் கிடங்கானது உரிய தீ தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் அதற்குரிய உரிமத்தைப் பெறாமலும் செயல்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது தொடா்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை: ஹைதராபாத் காவல் துறை ஆணையா் சி.வி.ஆனந்த் கூறுகையில், ‘‘விபத்தில் உயிரிழந்தவா்கள் 23 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் ஆவா். கிடங்கில் தீ விபத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. கிடங்குக்கு மேலே ஓா் அறை இருந்ததும் அங்கு தொழிலாளா்கள் தங்கியிருந்ததும் அப்பகுதியில் வசிப்பவா்களுக்கே தெரியாமல் இருந்துள்ளது. சேமிப்புக் கிடங்குகள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது’’ என்றாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்:

தீ விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘செகந்திராபாத் பகுதியில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளா்கள் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரது துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமானது பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இழப்பீடாக வழங்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளாா்.

முதல்வா்: விபத்தில் உயிரிழந்த புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தாா். தொழிலாளா்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தலைமைச் செயலா் சோமேஷ் குமாருக்கும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

மாநில அமைச்சா்கள் மக்மூத் அலி, டி.ஸ்ரீநிவாஸ் யாதவ், தலைமைச் செயலா் சோமேஷ் குமாா் ஆகியோா் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பாா்வையிட்டனா். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என தலைமைச் செயலா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →