நாட்டைப் பிளவுபடுத்தவும் பல பாகிஸ்தான்களை உருவாக்கவும் பாஜக விரும்புவதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பாஜக, ஆட்சியில் இருந்த கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீர் பண்டிட்களுக்கு என்ன செய்தது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியானது. 1990ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படக்குழுவினரை வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவினர் இப்படத்தைப் பற்றி பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி,
'நாட்டை பிளவுபடுத்தவும் பல பாகிஸ்தானை உருவாக்கவுமே பாஜக விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்காக அவர்கள் ஏதாவது செய்திருந்தால், இன்று அவர்களின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.
எனது தந்தையின் உறவினர்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் வன்முறையை நிறுத்த வேண்டும், ஆனால், அவர்கள் (பாஜக) பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வெல்ல முற்படுகிறார்கள். இந்து-முஸ்லிம், ஜின்னா, பாபர், ஔரங்கசீப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு ஔரங்கசீப் இருந்தார். பாபர் 800 ஆண்டுகளுக்கு இருந்தார். பாபர்-ஔரங்கசீப் பற்றி பேச இப்போது என்ன இருக்கிறது?
சாலை வசதிகள், நீர்ப்பாசனம், வேலையின்மை போன்ற பிரச்னைகள் நாட்டில் இல்லையா?' என்று கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.