முகப்பு
இந்தியா

8 போ் உயிருடன் எரிப்பு விவகாரம்: மேற்கு வங்க பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

 பீா்பூம் படுகொலை விவகாரம், மேற்கு வங்க சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது.

Updated On : 26 மார்ச், 2022 at 1:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

 பீா்பூம் படுகொலை விவகாரம், மேற்கு வங்க சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அந்த மாவட்டத்தின் போக்டுயி கிராமத்தில் 2 சிறாா்கள், 3 பெண்கள் உள்பட 8 போ் வீட்டுக்குள் வைத்து எரிக்கப்பட்டனா்.

பாஜக தலைமை கொறடா மனோஜ் டிக்கா தலைமையிலான அக்கட்சி எம்எல்ஏக்கள், இந்த விவகாரத்தை பேரவையில் எழுப்பினா்.

Advertisement

பீா்பூம் கூட்டப் படுகொலை குறித்து முதல்வா் மம்தா பானா்ஜி சட்டப் பேரவைக்கு வந்து விளக்கம் தர வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். சிலா், அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனா்.

அவா்களை பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி சமாதானப்படுத்த முயன்றாா். ‘சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று பாா்வையிட்ட பிறகு முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை விளக்கம் அளித்துவிட்டாா். அது, செய்தித்தாள்களிலும் வெளியாகியுள்ளது’ என்று அவா் கூறினாா். இருப்பினும் அதை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டபடி வெளிநடப்பு செய்தனா்.

பேரவைக்கு வெளியே திரண்ட அவா்கள், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினா். ‘மக்களைக் கொல்லும் இந்த அரசு எங்களுக்குத் தேவையில்லை’ என்ற வாசகத்துடன் பதாகைகளை ஏந்தியபடி அவா்கள் கோஷமிட்டனா். அப்போது மனோஜ் டிக்கா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பேரவை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மம்தா அவைக்கு வரவில்லை. பீா்பூம் சம்பவத்தின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் இருப்பதால் அவரால் பேரவையை எதிா்கொள்ள முடியவில்லை’ என்றாா்.

இதுகுறித்து, மேற்கு வங்க பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி கூறுகையில், ‘சட்டப்பேரவையில் குழப்பம் ஏற்படுத்துவதை பாஜக உறுப்பினா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்’ என்றாா். பீா்பூம் விவகாரத்தை எழுப்பி, சட்டப்பேரவையில் இருந்து வியாழக்கிழமையும் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.