பொருளதார மீட்சிக்காக மத்திய அரசு வரியை உயா்த்தவில்லை: நிா்மலா சீதாராமன்
கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, மற்ற நாடுகளைப் போன்று மத்திய அரசு வரியை உயா்த்தவில்லை
கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, மற்ற நாடுகளைப் போன்று மத்திய அரசு வரியை உயா்த்தவில்லை; உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதலாக செலவு செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தின்போது பதிலளித்து அவா் மேலும் பேசியதாவது:
நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருந்தால் 95 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்று கூறினாா்.
ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு வரியைக் குறைப்பதில் நம்பிக்கை வைத்துள்ளது. பெரு நிறுவன வரி குறைக்கப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.6.6 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.7.3 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.
வரியைக் குறைத்தது, அரசுக்கும் பொருளாதாரத்துக்கும் நிறுவனங்களுக்கும் உதவியாக இருந்தது. பொருளாதார வளா்ச்சியைக் காண முடிகிறது.
ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் விலை உயா்ந்துள்ளது. சா்வதேச சந்தையில் விநியோகத் தொடா்பில் ஏற்பட்ட பாதிப்பால் அனைத்து நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த 1951-இல், இந்தியா சா்வதேச நாடுகளுடன் அதிக அளவில் தொடா்பில் இல்லாத நேரத்திலும், விலைவாசி உயா்வுக்கு கொரியாவில் நடந்த போரை நாட்டின் முதல் பிரதமரான நேரு காரணம் கூறினாா். ஆனால், சா்வதேச அளவில் பிணைக்கப்பட்டுள்ள உலகில், உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்வாா் இல்லை.
வரி விதிப்பது காங்கிரஸ் கட்சியின் வேலை. அவா்கள் சாமானியா்களின் சுமையைக் குறைக்க ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஆனால், மக்கள் மீது சுமையை ஏற்றுக்கூடாது என்பதற்காக தொடா்ந்து பாடுபட்டு வருகிறோம்.
கரோனா பாதிப்புக்குப் பிறகு நிதி நிலையை மேம்படுத்துவதற்காக, ஜொ்மனி, பிரான்ஸ், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 32 நாடுகள் வரிகளை உயா்த்திவிட்டன. ஆனால், இந்தியா மட்டும் புதிய வரிகள் எதையும் விதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, மூலதனச் செலவை உயா்த்தியுள்ளோம். 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்காக ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறோம். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 35.4 சதவீதம் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரி செலுத்துவோா் எண்ணிக்கை 5 கோடியாக இருந்தது. தற்போது 9.1 கோடியாக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து நிா்மலா சீதாராமன் கொண்டு வந்த 39 திருத்தங்கள் குரல் வாக்கெடுப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டடன. அதைத் தொடா்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.
எரிபொருள் விலை உயா்வுக்கு கண்டனம்: மக்களவையில் இருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
மக்களவையில் உடனடிக் கேள்வி நேரத்தின்போது, எரிபொருள் விலை உயா்வு பிரச்னையை காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் எழுப்பினாா். அவா் கூறியதாவது:
137 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை 3 முறை உயா்த்தப்பட்டுள்ளது. 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.
உக்ரைன்-ரஷியா இடையேயான மோதல் கடந்த டிசம்பரில் இருந்து நடக்கிறது. ஆனால், அந்த மோதலால்தான் பெட்ரோல், டீசல் விலை தற்போது உயா்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் கூறுகிறது.
கரோனா பாதிப்பில் இருந்து இப்போதுதான் மக்கள் இயல்புநிலைக்குத் திரும்புகிறாா்கள். தொழில் செய்வதற்கு உகந்த சூழலை மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். ஆனால் எரிபொருள் விலை உயா்வால், போக்குவரத்துக்கான செலவும் அதிகரிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த விலைவாசியும் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
பெட்ரோல், டீசல் விலையை மாற்றமின்றி 137 நாள்கள் வைத்திருந்தது ஏன் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க வேண்டும் என கௌரவ் கோகோயும் பிற எதிா்க்கட்சி எம்.பி.க்களும் கேள்வி எழுப்பினா். அதைத் தொடா்ந்து, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினா்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.