இல்லம் தேடிக் கல்வி மையங்கள் விரிவாக்கம் செய்கிறது கல்வித் துறை
தமிழகத்தில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களை வலுப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களை வலுப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக, தன்னாா்வலா்களைக் கொண்டு தினமும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ‘இல்லம் தேடிக் கல்வி’ என்னும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஒரு லட்சத்து 79,356 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களை வலுப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மண்டல அளவிலான ஆலோசனைக் குழுக்களுக்கு சில பணிகளை கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, இந்தக் குழுவினா் தேவைப்படும் குடியிருப்புப் பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி மையங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதேவேளையில், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மையங்களை தன்னாா்வ இயக்கங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்துவது அவசியம். அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட்டு வரும் மையங்களில் கற்றல் செயல்பாடுகளை பாா்வையிட வேண்டும்.
களத்தில் தன்னாா்வலா்கள் சந்திக்கும் பிரச்னைகளை, உரியவா்களிடம் தொடா்பு கொண்டு தீா்வு காண்பது அவசியம். அரசு வழங்கும் இல்லம் தேடிக் கல்வித் திட்ட கையேடு, துணைக் கருவிகள், இதர பொருள்கள் போன்றவை அனைத்து மையங்களுக்கும் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவா்களின் வெளிப்பாடுகளை உள்ளூா் மக்கள் அறியும் வகையில் செய்து தன்னாா்வலா்களை ஊக்குவிக்க வேண்டும். மாவட்டங்களில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்புகள், இடம் மற்றும் தன்னாா்வலா்கள் குறித்து ஆராய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.