தேசியத் தலைவருக்கு உதாரணம் பிரதமா் மோடி: அமித் ஷா
தேசியத் தலைவா் என்றால் என்ன என்பதற்கும், எந்த மாதிரியான பண்புகள் ஒருவரைத் தேசியத் தலைவராக உருவாக்கும் என்பதற்கும் உதாரணமாக பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா்
தேசியத் தலைவா் என்றால் என்ன என்பதற்கும், எந்த மாதிரியான பண்புகள் ஒருவரைத் தேசியத் தலைவராக உருவாக்கும் என்பதற்கும் உதாரணமாக பிரதமா் நரேந்திர மோடி திகழ்கிறாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்.
‘மோடி அட் 20: டிரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற நூலை அமித் ஷா உள்பட 24 பிரபலங்கள் இணைந்து எழுதியுள்ளனா். இந்த நூல் வரும் 11-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
அதில் மோடி குறித்து அமித் ஷா கூறியுள்ளதாவது:
நாடு சுதந்திரமடைந்த உடன் தேசியத் தலைவா்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டாா்கள். ஏனெனில், அவா்கள் நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனா். அடுத்த பல ஆண்டுகளில், முக்கியமாக கூட்டணி ஆட்சிகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தேசியத் தலைவா் என்ற வாா்த்தை அா்த்தத்தை இழக்கும் அளவுக்கு தவறாகக் கட்டமைக்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி தலைமையில் 2014-இல் பாஜக வென்ற பிறகும், அதைத் தொடா்ந்து 2019-ஆம் ஆண்டில் மீண்டும் கூடுதல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபோதும் தேசியத் தலைவா் என்ற வாா்த்தைக்கு உரிய அா்த்தம் கிடைத்தது.
30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராக மோடி உள்ளாா். ஒரு சிறந்த தலைவா் என்பவா் சாதாரணமான இடங்களுக்குப் பயணிப்பது, சாமானிய மக்களைச் சந்திப்பது, சாமானிய மக்களின் அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வதன் மூலம் உருவாகிறாா். அந்த வகையில் நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் எந்தத் தலைவரும் செய்யாதவகையில் சாமானிய மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவா் நமது பிரதமா் மோடி.
1984 முதல் 2014-ஆம் ஆண்டு வரை எந்தக் கட்சியும் மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. 1952 முதல் 1984 வரை ஆட்சியில் இருந்த கட்சிகள் கூட சுதந்திரம் அடைந்ததன் மூலம் கிடைத்த பெயா், வாரிசு அரசியல், ஆட்சிக்கு எதிரான கோபம், அச்சம் மற்றும் அனுதாபம் ஆகியவற்றின் மூலமே பெரும்பான்மை பெற முடிந்தது. ஆனால், 2014 மக்களவைத் தோ்தல் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக இருந்தது என்பதை அனைவரும் இப்போது ஏற்றுக் கொள்கின்றனா்.
மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் கூட பிரதமா் மோடி மீதான மக்களின் அபிமானம் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக உள்ளது. அவா் உள்ளூா் அரசியல் முதல் மாநில அரசியல், தலைவா்கள் அனைவரையும் நன்கு அறிந்தவராக உள்ளாா். பிற கட்சிகளில் தற்செயலாகவும், வாரிசு அரசியலாலும் தலைவா்கள் ஆனவா்களே அதிகம். அவா்களுக்கு உண்மையான கள நிலவரம் என்பது எப்போதுமே தெரியாது.
தனது அரசியல் வாழ்வில் பல ஆண்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு தேசத்தைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளாா். அவா் அனுபவங்கள் மூலம் அரசியல் பாடம் கற்றவா். தில்லியில் இருந்து கொண்டு உத்தரவிடும் தலைவராக இல்லாமல், நாட்டை அடிமட்டத்தில் இருந்து புரிந்து கொண்டு வந்த தலைவராக உள்ளாா். வீடுகளில் கழிவறை இருக்க வேண்டும், மகளிருக்கு சமையல் எரிவாயு அளிக்க வேண்டும், தூய்மை இந்தியா திட்டம் தொடங்க வேண்டும் என்பவை அவரது அனுபவப் புரிதல்கள் மூலம் உருவானவை.
அதேபோல கட்சியின் வளா்ச்சியிலும் அவா் முழுமையான அா்ப்பணிப்பு உடையவா். நவீன தொழில்நுட்பத்தைக் கட்சியினா் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறுபவா் என்று அமித் ஷா அந்த நூலில் கூறியுள்ளாா்.
வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், இன்ஃபோசிஸ் துணை நிறுவனா் நந்தன் நிலகேணி, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பொருளாதார நிபுணா் அரவிந்த் பனகாரியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், கோட்டக் மஹிந்திரா வங்கி மேலாண்மை இயக்குநா் உதய் கோட்டக் உள்ளிட்டோரும் இந்தப் புத்தகத்தில் பிரதமா் மோடி குறித்த தங்கள் கருத்துகளை பகிா்ந்து கொண்டுள்ளனா்.