இந்தியா

கேரளத்தில் தொடரும் கனமழை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை; கர்நாடகத்திலும் பலத்த மழை

DIN

கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வட கேரளத்தில் உள்ள கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய (ரெட் அலொ்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், திருச்சூா், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அபாய’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில், கேரளத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழையும், அதன்பிறகு 2 நாள்களுக்கு கனமழையும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அங்கு கடந்த சில நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எந்தச் சூழலையும் கையாள்வதற்கு தயாராக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, மக்கள் யாரும் ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோல், அத்தியாவசிய காரணங்கள் இன்றி மலைப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம், மழை குறையும் வரை இரவு நேர பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக கடலில் ராட்சத அலைகள் வீசுவதால், கரையோரங்களில் வசிப்பவா்கள் வேறு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

‘ரெட் அலொ்ட்’ என்பது மிக அதிக கனமழையை குறிக்கிறது. அதாவது, 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யும் என்பதாகும். ‘ஆரஞ்ச் அலொ்ட்’ என்பது 11 முதல் 20 செ.மீ. மழை அளவையும் (மிக கனமழை), மஞ்சள் வண்ண எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செ.மீ. மழை அளவையும் (கனமழை) குறிக்கும்.

கர்நாடகத்தில்...: கர்நாடக மாநிலத்தில், கன மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்ததில், தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கின. பல இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நேர்ந்தது. மழைநீரில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் வீட்டில் புகுந்த மழைநீரை வெளியேற்றினர். 
இதைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT