சீனர்கள் 263 பேருக்கு விசா வழங்கிய விவகாரத்தில் சிபிஐ வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிபிஐ குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக கார்த்தி சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்காவுடன் நம்பகத்தன்மையான உறவு: பிரதமர் மோடி
அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
"விசா விவகாரத்தில் நேரடியாகவோ, மறைமுகமாவோ, வேறு எந்தவொரு வகையிலோ எனக்குத் தொடர்பில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். சிபிஐ என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. அவையனைத்தையும் நான் மறுக்கிறேன்.
நான் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு கார்பிரேட் நிறுவனங்களுடனும் எனக்குத் தொடர்பில்லை. விசா நடைமுறையில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட நான் உதவவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
இந்தியாவில் திட்டங்கள் சார்ந்த பணிகளுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மேலும், விசா வழங்கக்கூடிய அதிகாரி எவரும் எனக்குத் தெரியாது.
கடந்த 7 வருடங்களில் மத்திய அரசின் அமைப்புகளால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் 6 முறை சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளேன். இந்த அமைப்புகள், ஒரு கட்சியின் அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படும் வகையில் மாறியுள்ளது வருத்தத்துக்குரியது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.