தில்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. 
இந்தியா

கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை

விதிகளை மீறி சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

DIN

புது தில்லி: விதிகளை மீறி சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2011-இல் பஞ்சாபில் உள்ள தல்வண்டி சாபோ எரிசக்தித் திட்டத்தை நிறுவும் ஒப்பந்தம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தத் திட்டத்தை முடிப்பதற்கான அவகாசம் கடந்ததால், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில் கூடுதல் பணியாளர்களை அழைத்து வந்து பணியை விரைந்து முடிக்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், இந்தியாவின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக சீன நிறுவனத்தால் கூடுதலாகப் பணியாளர்களை அழைத்துவர முடியவில்லை.
அதையடுத்து, அந்த நிறுவனம் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அணுகியது. விதிமுறைகளை மீறி 263 சீனப் பணியாளர்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக கார்த்தியிடம் அந்த நிறுவனம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரம், அவரின் ஆடிட்டரும் தல்வண்டி நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டவருமான எஸ்.பாஸ்கர ராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ, வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.
ஆனால், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பிரிட்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம், சிபிஐ அழைப்பாணைக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதனை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், பிரிட்டனிலிருந்து நாடு திரும்பவும், திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதனடிப்படையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆஜரானார். 
"அவரிடம் மாலை 6 மணி வரை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர். பிற்பகலில் ஒரு மணி நேர இடைவேளை அளித்தனர்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது "என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்தவொரு சீனருக்கும் விசா பெற்றுத் தர உதவவில்லை. இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள். சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக தயாராக உள்ளேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஜெர்மனி முதலீட்டர்கள் என்ன சொன்னாங்க தெரியுமா..?”: முதல்வர் MK Stalin பேட்டி

வெள்ளத்தில் மூழ்கிய 300 புதிய கார்கள்! தத்தளிக்கும் மாருதி சுசூகி குடோன்!

ஊருக்குள் புகுந்த யமுனை! தெருக்களுக்குள் படகு பயணம்!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது!

“கனவில்கூட விட்டுக்கொடுக்கும் EPS” Kanimozhi MP பேட்டி | DMK | ADMK

SCROLL FOR NEXT