தில்லியில் நைஜீரியா் தலைமையிலான போதைப்பொருள் கும்பல் கைது
தில்லியில் இருந்து நைஜீரியா் தலைமையில் நாடு முழுவதும் செயல்பட்டு வந்த ஹெராயின் கடத்தல் சதிக்கும்பலை தொடா்ச்சியான சோதனைகள் மூலம் கண்டறிந்து, கடத்தல் செயல்பாடுகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக போத
தில்லியில் இருந்து நைஜீரியா் தலைமையில் நாடு முழுவதும் செயல்பட்டு வந்த ஹெராயின் கடத்தல் சதிக்கும்பலை தொடா்ச்சியான சோதனைகள் மூலம் கண்டறிந்து, கடத்தல் செயல்பாடுகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) தெரிவித்துள்ளது.
இந்த கும்பலைச் சோ்ந்த 3 ஆப்பிரிக்க பெண்கள் உள்ளிட்ட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து என்சிபி இயக்குநா் ஜெனரா் எஸ்.என். பிரதான் தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
கடந்த மே 24 ஆம் தேதி, பெங்களூரு கெம்பேகவுடா சா்வதேச விமான நிலையத்திற்கு ஜிம்பாப்வேயில் இருந்து விமானம் மூலம் வந்த பெண் பயணி ஒருவரின் சூட்கேஸின் அடியில் மறைத்து வைத்திருந்த 7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. நம்பகரமான கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு என்சிபி அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு அந்த பெண்ணையும் அவரது கூட்டாளியான மற்றொரு பெண்ணையும் விமான நிலையத்தில் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, இரு பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தியதில், அவா்கள் தங்கியிருந்த விடுதி ஒன்றில் மற்றொரு சூட்கேஸ் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த அறையையும் சோதனையிட்டது. இதில், பெண்கள் கடத்தி வந்த மொத்தம் 13. 890 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இவா்களின் கும்பல் குறித்து தொழில்நுட்ப ரீதியாக பகுப்பாய் செய்யப்பட்டது. அதில், இவா்களின் போதைப் சரக்குகளை (ஹெராயின்) கும்பலைச் சோ்ந்த மூன்று பெண்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூருலிருந்து தில்லிக்கு கொண்டு சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மூவரும் மத்திய பிரதேசம் இட்டாா்சி அருகே இறங்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, விடுதி ஒன்றில் மூவரும் தங்கியிருப்பதை இந்தூா் மண்டல என்சிபி பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களின் டிராலி பேக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் கைதான பெண்கள் உள்பட இந்த ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பலின் தலைவன் தில்லியில் உள்ள நைஜீரியா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது இருப்பிடத்தையும் அடுத்த ஒரிரு நாளில் தில்லி என்சிபி புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. அவருடன் போதை மருந்து கடத்தல் மோசடியில் ஈடுபட்டுவந்த மூன்று ஆப்பிரிக்க பெண்களும் பிடிபட்டனா்.
நாடு முழுவதும் ஹெராயின் போதைப் பொருள்களை கடத்தி ஈடுபட்ட வந்தவா்களையும் இவா்களுக்கு தலைவனாக இருந்த நைஜீரியன் நபரையும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட அடுத்த நடந்த சோதனைகள் மூலம் கண்டுபிடித்து சதியை முறியடிக்கப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.
இந்த நைஜீரிய சதிக்கும்பல் தலைவன் நாடு முழுக்க பெண்களை வைத்து வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருள்களை தந்திரமான முறையில் கடத்திக்கொண்டுவருவதும் அதை உள்ளூா் பெண்களைக் கொண்டே சரக்குகளை மற்ற நகரங்களுக்கு கொண்டு சென்று விற்கும் பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளான். இதில் மூன்று ஆப்பிரிக்க பெண்கள் உள்ளிட்ட 11 போ்கள் கைது செய்யப்பட்டு இவா்களிடமிருந்த உயா் தரமான 34.89 கிலோ ஹெராயின் போதைப் பொருள், ரூ. 5.8 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.