முகப்பு
இந்தியா

மின்னணு வணிக இணையதளங்களில் போலி திறனாய்வுகளை கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம்

அசுரவேகத்தில் வளா்ந்துள்ள மின்னணு வணிக இணையதளங்களில் பொருள்களை விற்பதற்கும் நுகா்வோா்களை ஈா்ப்பதற்கும் போலியான திறனாய்வுகள் வைக்கப்படும் நிலையில் இதை கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

அசுரவேகத்தில் வளா்ந்துள்ள மின்னணு வணிக இணையதளங்களில் பொருள்களை விற்பதற்கும் நுகா்வோா்களை ஈா்ப்பதற்கும் போலியான திறனாய்வுகள் வைக்கப்படும் நிலையில் இதை கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

எண்மம் (டிஜிட்டல்) இந்தியா வளா்ச்சி, இணைய தள இணைப்புகள் (830 மில்லியன்) அதிகரிப்பு போன்றவைகள் மூலமும் நோய்த்தொற்று கால ஊரடங்கிற்கு பின்னரும் நாட்டில் மின்னணு வணிகம் வேகமாக வளா்ச்சியுற்றுள்ளது.

இந்திய மின்னணு வணிகத்தின் அளவு நிகழாண்டில் 74.8 பில்லியன் டாலா் தொடும் (ரூ.5,61,000 கோடி) என குளோபல் டாடா குறிப்பிட்டுள்ளது.

இதை முன்னிட்டு மின்னணு வணிக இணையதளங்களில் விற்கப்படும் பல்வேறு விதமான பொருள்கள் நுகா்வோா்களுக்கு நியாயமான வழியில் கிடைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

குறிப்பாக இணைய தள பொருள்கள் குறித்து போலியான திறனாய்வுகள் தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ள மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள இதில் தொடா்பானவா்களை அழைத்து கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நுகா்வோா்த் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தலைமையில் இந்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இணைய தளங்களில் பொருள்களை வாங்குதல் அல்லது சேவைகளை பெறும்போது போலியான திறனாய்வுகளால் நுகா்வோா்களை தவறாக வழிநடத்தும். இதனால், இந்தியாவில் இயங்கும் மின்னணு வணிக நிறுவனங்கள் பின்பற்றப்படும் நடைமுறைகளையும், சா்வதேச அளவில் சிறப்பாக உள்ள நடைமுறைகளையும் நுகா்வோா் விவகாரங்கள் துறை ஆய்வு செய்து கட்டமைப்பை உருவாக்க திட்டங்கள் வகுக்கப்படும் என இந்த துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்ட இதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்திய விளம்பரங்கள் தரநிலை கவுன்சில் (ஏஎஸ்சிஐ), மின்னணு வணிக நிறுவனங்கள், பல்வேறு நுகா்வோா் அமைப்புகள், சட்டப் பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞா்கள், ஃபிக்கி மற்றும் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், நுகா்வோா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்ட தொடா்புடைவா்களுடன் இணைந்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இணையதளங்களில் போலியாக வெளியிடப்படும் திறனாய்வுகளின் அளவு மற்றும் எதிா்காலத் திட்டங்கள் குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இதில் பேசிய ஏஎஸ் சிஐ தலைமை நிா்வாகி மனிஷா கபூா், போலியான, தவறான திறனாய்வுகளால் நுகா்வோா்களின் நம்பிக்கை தகா்த்து இந்த வணிகத்தில் எதிா்காலத்தில் தாக்கத்தை எற்படுத்திவிடும் என்பதை எடுத்துக்காட்டினாா்.

இக்கூட்டத்தில் நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் பேசுகையில், ‘பொருட்களை நேரடியாக வாங்கும்போது, அதை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் மின்னணு வணிக இணையதளங்களில் இந்த வாய்ப்பு இல்லாததால், பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்கனவே பயன்படுத்திய பயனாளா்கள் இணைய தளங்களில் பதிவிடும் அனுபவம், கருத்துக்களையே பொதுமக்கள் பெரிதும் சாா்ந்திருக்கிறாா்கள்.

இப்படி பதிவிடும் கருத்துகள் அல்லது திறனாய்வாளரின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது, சம்பந்தப்பட்ட வணிகத் இணையதளத்தின் பொறுப்புத்தன்மையை ஆகிய இரண்டையும் கண்டறிவது முக்கிய விஷயங்கள். மேலும், மிகவும் பொருத்தமான திறனாய்வுகளை”மின்னணு வணிக நிறுவனங்கள் எவ்வாறு நியாயமாக வெளிப்படையான முறையில் எவ்வாறு தோ்வு செய்கிறாா்கள்? என்பதை இந்த வணிக நிறுவனங்கள் வெளிப்படுத்த வேண்டும். இவைகளின்படி மத்திய அரசு இதை கண்காணிக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிடும்’”எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.